அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஈபிஎஸ் புதிய மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஈபிஎஸ் புதிய மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

கட்சி விவகாரங்களில் ஓபிஎஸ் எவ்வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பேசுபொருள் ஆன நிலையில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் சர்ச்சைக்குரிய வகையில் முற்றுப்பெற்றது. இந்நிலையில் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அப்போதே தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். முன்னதாக “அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் அதன் மீது எந்த முடிவும் எடுக்கக்கூடாது” எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுகவின் செயல்பாட்டிற்கு ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஓபிஎஸ்ஸின் அனைத்து செயல்பாடுகளும் கட்சியை முடக்கும் வகையில் அமைந்துள்ளது. பொருளாளர் என்ற முறையில் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அவர் அதையும் செய்யாமல் இருக்கிறார். இதனால் கட்சி செலவுகளுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டால், ஓபிஎஸ் அவர்களுக்குக் கட்சியில் எவ்வித செல்வாக்கும் இல்லை என்பது தெரிகிறது. அவர் கட்சி பொருளாளராக இருக்கக் கூடிய நிலையில் கட்சியின் நலனுக்காக எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல், கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். பொதுக்குழுவிலும், தொண்டர்களிடமும் அவர் மீது நம்பிக்கை இல்லை என்பதால் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்குத் தடை விதிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in