
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள செல்லும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். ஆர்.பி.உதயகுமார் தான் இதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் கவனித்து வருகிறார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதற்கு முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை பசும்பொன் செல்ல உள்ள எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி எடப்பாடி பழனிசாமியை பாதுகாப்பாக பசும்பொன் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.