அதையும் அமித் ஷா கிட்டயே கேட்டுருங்க பன்னீரு..!

அதையும் அமித் ஷா கிட்டயே கேட்டுருங்க பன்னீரு..!
ஓவியம்: வெங்கி

எம்ஜிஆர் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்திவிட்டுப் பேசிய சசிகலா, “அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அறைகூவல் விடுத்தார். அவரது இந்தப் பேச்சை அதிமுக தரப்பில் யாரும் சட்டை செய்யாத நிலையில், உண்மையிலேயே ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் - இவர்கள் எல்லாம் மீண்டும் பகை மறந்து ஒன்றாக கைகோத்தால் என்னாகும்..? அதுபற்றிய ஒரு கற்பனை இதோ...

ஓவியம்: வெங்கி

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலத்தில் ஜொலிக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஒன்றாக இங்கே தொண்டர்களுக்கு தரிசனம் தர வருகிறார்கள்.

வாசலில் திரண்டு நிற்கும் தொண்டர்கள், “தியாகத் தலைவி சின்னம்மா வாழ்க... அண்ணன் ஓபிஎஸ் வாழ்க!” என்று கோஷம் போடுகிறார்கள்.

(சற்றே கடுப்பாகும்) ஈபிஎஸ் பக்கத்தில் நின்ற ஜெயக்குமாரிடம்: “பாருங்க, இதுக்குத்தாங்க இந்த அணிகள் இணைப்பே வேணாமுன்னு சொன்னேன். திட்டமிட்டு அவங்க ரெண்டு பேரு, பேரை மட்டும் கத்துறதுக்கு ஆள் செட் பண்ணிருக்காங்க பாருங்க!”

ஜெயக்குமார்: நானும் தான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்... யாரு கேட்டீங்க”

தூரத்தில் இருந்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள், “ஈபிஎஸ் வாழ்க...” என கோஷம் எழுப்பிக்கொண்டே ஓடிவருகின்றனர்.

ஈபிஎஸ்: இதோ வந்துட்டாங்கள்ல நம்மாளுங்க... ஏன் இவ்வளவு லேட்?”

ஈபிஎஸ் சைடு எம்எல்ஏ-க்கள்: “என்னதான் அணிகள் இணைஞ்சாலும் ஒங்க கைதான் ஓங்கி இருக்கணும்னு அம்மா சமாதிக்குப் போயி தியானம் பண்ணிட்டு ஒரு அர்ச்சனையப் பண்ணிட்டு வந்தோம்ண்ணே. அதான் லேட்”

அந்த நேரத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வருகிறார்கள்.

ஓவியம்: வெங்கி

ஓபிஎஸ்: “அம்மா சமாதியா... தியானமா? இதெல்லாம் நம்ம மேட்டராச்சேப்பா?”

ஈபிஎஸ்: “ஒருங்கிணைப்பு... கொஞ்சம் அடங்குங்க. நீங்கபாட்டுக்கு இதுக்கும் ஒரு தர்ம யுத்தத்தைத் தொடங்கிடாதீங்க!

சின்னம்மா: “இந்த கூட்டம் முடிஞ்சு போறப்ப... நம்ம நாலு பேரும் ஒண்ணாவே அம்மா சமாதிக்குப் போயி, ‘இனிமே நாங்க சண்டையே போட்டுக்க மாட்டோம்’னு ‘அடிச்சு’ சத்தியம் பண்ணணும்.”

ஈபிஎஸ்: ”எங்க மூணு பேரையும் பின் சீட்டுல் உக்கார வெச்சிட்டு... நீங்க மட்டும் முன் சீட்டுல உக்காந்து சீன் போடப் பாக்குறீங்களா சின்னம்மா?”

சின்னம்மா: ”நம்ம மீட் பண்ணி கால் அவரு கடந்திருச்சு... இன்னும் ஒருத்தர்கூட கால்ல விழாம இருக்கீங்க... பழைய ரூல்ஸ் எல்லாம் மறந்துருச்சா?”

(மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்)

ஓவியம்: வெங்கி

அதற்குள்ளாக தொண்டர்கள் இடித்துத்தள்ள நால்வரும் கூட்ட அரங்கிற்குள் நுழைகிறார்கள்.

டிடிவி தினகரன்: “எதுவா இருந்தாலும் சட்டுப்புட்டுன்னு பேசிமுடிங்க. மாற்றுக் கட்சியினர் எங்க கட்சியில இணையும் விழாவுக்குப் போகணும்.”

சின்னம்மா: “எந்தக் கட்சியிலருந்து நம்ம கட்சிக்கு கட்டுக்கோப்பா வர்றாங்க ராஜா..?”

டிடிவி: “நம்ம கட்சி இல்ல... அது என்னோட கட்சி. அதிமுகவுலருந்து ஐயாயிரம் பேர் வர்றாங்க.”

சின்னம்மா: “எல்லாரும் ஒண்ணாகிட்ட பின்னாடி தனியா என்னத்துக்குப்பா காகித ஓடம் ஓட்டிக்கிட்டு..?”

டிடிவி: உங்களை எல்லாம் நம்பமுடியாது... அதனாலதான் கட்சியை இன்னும் கலைக்காம வெயிட்டிங்ல வெச்சிருக்கேன்.”

ஈபிஎஸ்: “சின்னம்மா... இது சரிப்பட்டு வராதுங்க. நான் கிளம்புறேன் ஈரோட்டுக்கு”

சின்னம்மா: “சமாதானம் பேசவந்த இடத்துல இப்புடி ஆளாளுக்கு முறுக்கிக்கிட்டு நின்னா எப்படி எடப்பாடி?”.

டிடிவி: “டேபிளுக்குக் கீழ பேனாவைப் போட்டுட்டு தேடுறாப்ல கால்ல விழுந்து கும்புட்டதெல்லாம் என் தலைவனுக்கு மறந்து போச்சுது போலருக்கு.”

ஈபிஎஸ்: “இதுக்குத்தாங்க. இந்த சந்திப்பே வேண்டாம்ன்னு சொன்னேன். தொண்டர்களும், நிர்வாகிகளும் என் பின்னாடி தான் இருக்காங்க. இயக்கமும், சின்னமும் என்கிட்ட தான் இருக்கு.”

(தேநீர் இடைவேளை. வெளியில் தொண்டர்கள் திரண்டிருக்கிறார்கள்)

ஓவியம்: வெங்கி

நால்வரும் ஒன்றாக கைகோத்த செய்தியானது சேனல்களில் நேரலையாக எக்கோ அடிக்கிறது.

நியூஸ் ஜெ நேரலையில்... ‘அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் அவரை நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆக்கிட...’

ஜெயா டிவி நேரலையில்... ‘தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் அவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஆக்கிட...’

(அந்த நேரம் பார்த்து கூட்ட அரங்கிற்குள் ஒரு தொண்டர் தடைகளைத் தகர்த்து ஓடிவருகிறார்)

போடி தந்த பொற்கிழியே... தங்கமகனே... மோசம் போய்ட்டோம்.

ஓபிஎஸ்: “என்னாச்சு... என்னாச்சு?”

தொண்டர்: “ஆளுக்கு ஒரு சேனலை வைச்சுக்கிட்டு, இஷ்டத்துக்கு படங்காட்டுறாங்க. நமக்கும் ஒரு சேனல் வேணும்ணே.”

ஓபிஎஸ்: “அமைதியா இருங்க... அமித் ஷா கிட்ட பேசிட்டு நம்மளும் ஒரு சேனல் தொடங்கிடுவோம்.”

டிடிவி: “பேசாம தமிழ்நாட்டை மூணா பிரிப்போம். தெற்கை நான் பாத்துக்கிறேன். கொங்கு ஈபிஎஸ் பாத்துக்கட்டும். சென்னையை சின்னம்மா கன்ட்ரோல் எடுப்பாங்க”.

ஓபிஎஸ்: “அப்போ நான்?”

டிடிவி: “அதையும் அமித் ஷாகிட்டயே கேட்டுருங்க பன்னீரு”

ஈபிஎஸ்: “பொறுத்துப் பொறுத்துப் போனா.. நீங்கபாட்டுக்கு என்னென்னமோ பேசிட்டே போறீங்க... அம்மா இருந்த காலத்தைவிட கட்சியை கட்டுக்கோப்பா வெச்சிருக்கது நானு. அதனால, என் தலைமையில தான் கட்சி இருக்கும். இதுக்கு சம்மதம்னா இருங்க. இல்லைன்னா... மூணு பேரும் நடையக் கட்டுங்க.”

டிடிவி: அப்ப சரி... களத்துல சந்திப்போம். இப்பவே ஒரு லட்சம் குக்கருக்கு ஆர்டர் குடுத்துடுறேன்.

சின்னம்மா: “அம்மாவுடன் இருந்து இந்த இயக்கத்திற்காக நான் செய்த தியாகங்களை எல்லாம் யாருமே நினைச்சுப் பாக்க மாட்டீங்களா?”

ஓபிஎஸ்: “நான் கூடத்தான் இந்த இயக்கத்துக்காக கஷ்டப்படேன். நான் பட்டது மட்டுமில்லாம... என் புள்ளையையும் எம்பியாக்கி கஷ்டப்பட வெச்சிருக்கேன்!”

ஈபிஎஸ்: “என்னது... மகனை எம்பியாக்குனதெல்லாம் கட்சிக்கு செஞ்ச தியாகமா? நான் கெளம்புறேங்க. கடைசியா போறவங்க ஆபீஸ் கதவை நல்லா சாத்தி பூட்டிட்டுப்போங்க. மறுபடியும் ஓபிஎஸ் வந்து ஒடைச்சிடாம பாத்துக்குங்க. கதவுக்கு காசு செலவழிச்சதா சும்மா சும்மா கணக்கெழுத முடியாது.”

ஓவியம்: வெங்கி

(இந்த நேரம் பார்த்து அம்மாவின் அசரீரி ஒலிக்கிறது)

‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான். நான் உங்கள் ஜெயலலிதா பேசுகிறேன். என்னைத்தானே நிரந்தரப் பொதுசெயலாளர் என்றீர்கள். கழகமே கோயில்... அம்மாவே தெய்வம் என்றெல்லாம் முழங்கினீர்களே... அத்தனையும் நடிப்பா..! ’

(அசரீரி வந்த திசை நோக்கி பொசுக்கென விழுந்து கும்பிடுகிறார் ஓபிஎஸ்)

ஓபிஎஸ்: “தங்கத் தாயே... உங்களுக்கு சங்கடம் வந்தபோதெல்லாம் சாவியை என்கிட்டத்தானே குடுத்துட்டுப் போனீங்க. இப்ப இவங்க எல்லாம் சேர்ந்துக்கிட்டு என்னைய என்ன பாடு படுத்துறாங்க பாருங்க.”

சின்னம்மா: “அக்கா... உங்களின் நிழலா இருந்த அன்பு தோழி நான் தானே!”

டிடிவி: “நீங்க இல்லாதப்பவே உங்களுக்குப் பதிலா ஆர்.கே.நகர்ல ஜெயிச்சவன் மேடம் நான்.”

ஈபிஎஸ்: ”அம்மா... உங்களவிட ஆக்ரோஷமா நான் தான் இப்ப திமுகவ எதிர்த்துட்டு இருக்கேன் தெரியுமா!”

ஜெயலலிதா: “யப்பா சாமிங்களா... அடுத்த மாசம் பொறந்த நாள் வருதேன்னு தெரியாம கட்சி ஆபீஸ் பக்கம் வந்துட்டேன். இனிமே இந்தப் பக்கம் எட்டிக்கூட பாக்கமாட்டேன் சாமி!”

(அம்மாவின் குரல் அடங்கியதும், சேனல்களில் பேட்டி ஓடுகிறது)

“அம்மா ஆவியா வந்து என்கிட்ட பேசுனாங்க. நான் தான் நிரந்தர பொதுச்செயலாளரா இருந்து கட்சியை வழிநடத்தணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க” - நான்கு பேரும் ஒரே மாதிரியாக சொன்னார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in