`ரவீந்திரநாத்தை நீக்கி விட்டோம்; அதிமுக எம்பி கிடையாது'- ஓபிஎஸ் மகனுக்கு எதிராக கடிதம் எழுதிய ஈபிஎஸ்

`ரவீந்திரநாத்தை நீக்கி விட்டோம்; அதிமுக எம்பி கிடையாது'- ஓபிஎஸ் மகனுக்கு எதிராக கடிதம் எழுதிய ஈபிஎஸ்

”ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. அவரை அதிமுக எம்பியாக கருதக்கூடாது” என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திராநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் கட்சியின் அதிகாரத்தை சட்டப்படி முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி இறங்கினார். அதிமுகவில் தங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இருதரப்பிலும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வங்கிக் கணக்கு என அனைத்து வழிகளிலும் தீர்வுகாண முயன்றார்கள். அந்த வகையில் ஓபிஎஸ் வகிக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளதாகவும், சட்டப்படி அதில் முடிவு எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அதிமுக எம்பியாக கருதக்கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஒரே எம்.பி. ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in