`ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டு காலம்; குறுக்குவழியில் பதவியை பெற்றுள்ளார் ஈபிஎஸ்'- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

`ஒருங்கிணைப்பாளர் பதவி 5 ஆண்டு காலம்; குறுக்குவழியில் பதவியை பெற்றுள்ளார் ஈபிஎஸ்'- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

"அதிமுக பொதுச்செயலாளர் பதவியை குறுக்குவழியில் பழனிசாமி பெற்றுள்ளார்" என்று ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் பொதுக்குழுவை கூட்டி அவரை இடைக்கால பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்தை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என அறிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து தங்களை கேட்காமல் பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று 2-வது நாளாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு தரப்பில் சார்பில் காரசார வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். அப்போது நீதிபதிகள், அதிமுகவின் அவைத்தலைவர் பதிவுக்கான பொறுப்புகள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர். குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி தரப்பு செயல்படுகிறது. திருத்தப்பட்ட விதிகளுக்கும், அதற்கு முன்னர் இருந்த விதிகளுக்குமான ஒப்பீடு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருக்கலாம். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்திருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தேவைப்பட்டிருக்காது. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் பழனிசாமி கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது. 5 ஆண்டுகள் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்களே இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி. கட்சி அலுவலம், தேர்தல் முடிவு, நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும். பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட இருவரும் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தான் விதிகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுவதை போல் எதுவும் இல்லை.

பொதுச்செயலாளர் பதவியை குறுக்குவழியில் பழனிசாமி பெற்றுள்ளார். அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி தான். ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர்; அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சி நிலைப்பாடு. அதையும் மீறி ஜெயலலிதாவின் கட்சி பதவிக்கு வர நினைத்தார் பழனிசாமி என வாதிட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று அனைத்து தரப்பினரும் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in