பாஜக தலைவர்களைச் சந்திக்க ஈபிஎஸ் டெல்லி பயணம்: ஓபிஎஸ்சுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்!

பாஜக தலைவர்களைச் சந்திக்க ஈபிஎஸ் டெல்லி பயணம்: ஓபிஎஸ்சுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்!

அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு முதல் முறையாக டெல்லிக்குப் பயணம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. குடியரசுத்தலைவர் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை களேபரம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிளவு என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து இருதரப்பிலும் கருத்து மோதல்கள், வன்முறைகள் வெடித்தன. ஜூலை 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் சந்திப்பில் இருதரப்பினரும் தனித்தனியே திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால், அந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது, தான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் சொல்லிவருகிறார். அதிமுகவில் தங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இருதரப்பிலும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சட்டமன்றம், வங்கிக் கணக்கு என அனைத்து வழிகளிலும் தீர்வுகாண முயன்று வகின்றனர். அந்த வகையில் டெல்லி ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியா விடை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அப்போது அதிமுக நிலவரம் குறித்து அவர்களிடம் பேசி டெல்லியுடன் ஒரு சுமூக உறவை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார். ஓ.பன்னீர் செல்வத்தின் டெல்லி கணக்குகளைச் சுக்கு நூறாக்கும் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in