ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் திடீர் அழைப்பு: நீண்ட மவுனத்துக்கு பிறகு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருப்பது என்ன?

ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் திடீர் அழைப்பு: நீண்ட மவுனத்துக்கு பிறகு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருப்பது என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, பல மாவட்ட செயலாளர்கள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று பேசியிருக்கிறார்கள். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறி பற்றவைத்தார். இவரது இந்த போட்டி கட்சிக்குள் புயலை கிளப்பியது.

ஒற்றைத் தலைமை வேண்டாம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்களும், தேவை என்று ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கூறிவருகின்றனர். இதனிடையே, ஜெயக்குமார் மீது ஓபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதனிடையே, பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஓபிஎஸ் ஆவடி காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினார். மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கு நாளை யாரும் வர வேண்டாம் என்று உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு, இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் பகிரங்க அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "பொதுக்குழுவுக்கு வாருங்கள். பிரச்சினைகளை பொதுக்குழுவில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு - செயற்குழு நடக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்ததுபோல, பொதுக்குழுவில் பங்கேற்போம்" என்று கூறியுள்ளார். இக்கடிதத்தில் ஒற்றைத் தலைமை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in