ஈபிஎஸ் கடிதம் ஏற்பு... ஓபிஎஸ் கடிதம் நிராகரிப்பு: அதிமுகவில் அடுத்து நடக்கப் போவது என்ன?

ஈபிஎஸ் கடிதம் ஏற்பு... ஓபிஎஸ் கடிதம் நிராகரிப்பு: அதிமுகவில் அடுத்து நடக்கப் போவது என்ன?

அதிமுகவின் வங்கி கணக்குகளைக் கையாள புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முழு அதிகாரம் என்ற எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும் ஓபிஎஸ் கடிதத்தை வங்கிகள் நிராகரித்து விட்டன.

சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். கேவிபி மற்றும் இந்தியன் வங்கிகளில் அதிமுக கட்சிக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் உள்ளன. இந்நிலையில் அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார். அதில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு அன்றே கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராகத் தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் கடிதத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி அவரின் கடிதத்தை வங்கிகள் நிராகரித்து விட்டன. மேலும் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகள், அதிமுக சட்ட விதிகள் உள்ளிட்டவற்றையும் கடிதத்துடன் இணைத்துக் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in