நாளை பொதுக்குழு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

நாளை பொதுக்குழு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

அதிமுக பொதுக்குழு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதை நடத்தலாமா கூடாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு மீது நாளை காலை 9 மணிக்குத்தான் விசாரணை நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் இன்றே சென்னையில் முகாமிட்டுள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இன்றே சென்னை வந்தடைந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடன் க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்துப் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. கூடவே தன் ஆதரவாளர்களான தளவாய் சுந்தரம், பெஞ்சமின், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களிடமும் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோரோடு ஆலோசனை நடத்திவருகிறார். அவர்களிடம் நாளைய பொதுக்குழு தொடர்பான வழக்கு பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் விசாரித்து வருகிறார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு வானகரம் மண்டபம் வெகு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதில் இம்முறை ஓ,பன்னீர்செல்வத்தின் புகைப்படமே இடம்பெறவில்லை. இதனிடையே பொதுக்குழுவுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பதாகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என அவரது ஆதரவாளர்கள் அமளிதுமளிப்படுத்துகின்றனர். இதனிடையேதான் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்குத் தடை கோரி தொடுத்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in