2024ல் பாஜக பெரும்பான்மையை இழப்பது முற்றிலும் சாத்தியம்: சசி தரூர் நம்பிக்கை

2024ல் பாஜக பெரும்பான்மையை இழப்பது முற்றிலும் சாத்தியம்: சசி தரூர் நம்பிக்கை

2019 தேர்தல் வெற்றியைப்போல 2024-ல் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக கட்சி 50 இடங்களை இழக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

கேரள இலக்கிய விழாவில் நேற்று பேசிய திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர், பாஜகவின் ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், அவர்கள் பல மாநிலங்களை இழந்துள்ளனர் என்பதும், மத்திய அரசை அவர்கள் இழப்பது முடியாத காரியம் அல்ல என்றும் தெரிவித்தார்.

கேரள இலக்கிய விழாவில் ‘இந்தியா@75: ஜனநாயக நிறுவனங்கள் வழியாக ஒரு நடை’ என்ற அமர்வின்போது பேசிய சசி தரூர், “ 2019-ல் பாஜக எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்று பார்த்தால், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனைத்து இடங்களையும் வென்றார்கள். பிஹார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அவர்கள் வென்றார்கள். மேற்கு வங்கத்தில் 18 இடங்களும் பாஜகவுக்கு கிடைத்தது. இப்போது, அந்த முடிவுகள் அனைத்தையும் நகலெடுப்பது சாத்தியமற்றது. மேலும் 2024-ல் பாஜக பெரும்பான்மைக்கு கீழே இறங்குவது முற்றிலும் சாத்தியமாகும். புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல், கடைசி நிமிடத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பாஜக அலைக்கு வழிவகுத்தது.

பாஜகவுக்கு 250, மற்றவர்கள் 290 என்று இருந்தால்... அந்த 290 பேரும் ஒற்றுமையாக ஆட்சியமைப்பார்களா அல்லது அன்றைய சில கட்சிகளின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைக்க பாஜகவால் முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது" என்று அவர் கூறினார். 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக 303 இடங்களையும், காங்கிரஸ் 52 இடங்களையும் கைப்பற்றியது.

ஆசியாவின் மிகப் பெரிய இலக்கியச் சந்திப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் கேரள இலக்கியத் திருவிழாவில், நோபல் பரிசு பெற்றவர்கள், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள், மூத்த அரசியல்வாதிகள் முதல் வரலாற்றாசிரியர்கள், திரைப்படப் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in