தமிழில் பொறியியல் படிப்பு ஏன்?- அமைச்சர் பொன்முடி விளக்கம்!

தமிழில் பொறியியல் படிப்பு ஏன்?- அமைச்சர் பொன்முடி விளக்கம்!

இருமொழிக் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நிகழ் கல்வியாண்டு முதல், முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் தமிழ் வழியில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழ் வழியில் கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களைப் படிக்கலாம் என்ற சட்டத்தைக் கருணாநிதி கொண்டுவந்தார். ஆங்கில வழியில் படிப்பவர்களும் தமிழில் தேர்வு எழுத வழிவகுத்தவர் கருணாநிதி. இருமொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதைத்தான் அண்ணா பெரிய வாசல், சிறிய வாசல் என இரண்டு வாசல்களை வைத்த கதையை உதாரணம் காட்டி அண்ணா நமக்குச் சொல்லி இருக்கிறார். இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்து நம்முடைய கல்வித் தரத்தை உயர்த்தி இருக்கிறோம். இதுதான் நம்முடைய மாடல். வேறு யாரையும் நாம் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. அவர்களுக்கு எந்த மொழி விருப்பமாக இருக்கிறதோ, அதைப் படிக்கட்டும். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி படிக்கும் ஆசை இருப்பவர்கள் படித்துவிட்டுப் போகட்டும். இந்தி கட்டாயம் என்பதைத்தான் எதிர்க்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in