முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஜார்க்கண்டில் முற்றும் அரசியல் நெருக்கடி

ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

சுரங்க ஊழல் தொடர்பான விசாரணைக்கு, முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள அதன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே முதலமைச்சரின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜூலை மாதம் அமலாக்கத்துறை நடத்திய மாநிலம் தழுவிய சோதனைகளில், பங்கஜ் மிஸ்ராவின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.11.88 கோடி கைப்பற்றப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது வீட்டில் ரூ.5.34 கோடி கணக்கில் வராத பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்திட்ட சில காசோலைகளையும் அமலாக்கத்துறை கைப்பற்றியது.

அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில், ஹேமந்த் சோரனின் பிரதிநிதியான பங்கஜ் மிஸ்ரா தனது கூட்டாளிகள் மூலம் முதலமைச்சரின் சட்டமன்றத் தொகுதியான பர்ஹெய்ட்டில் சட்டவிரோத சுரங்கத் தொழிலை கட்டுப்படுத்துகிறார் என்று கூறியுள்ளது.

மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பணமோசடியை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, இதுவரை ரூ. 37 லட்சத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் மாதம், இந்த வழக்கில் ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத்திடமும் அமலாக்கத்துறை விசாரித்தது.

2021ம் ஆண்டு சுரங்க குத்தகையை தனக்கே ஒதுக்கீடு செய்துகொண்டதன் மூலம் தேர்தல் விதிகளை மீறியதாக பா.ஜ.க புகார் அளித்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரனை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த இரு மாதங்களாகவே ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தற்போது சோரனுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனால் அரசியல் களம் மேலும் சூடாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in