ராகுல் காந்தியிடம் 10 மணிநேரம் விசாரணை: இரவில் நடந்தது என்ன?

ராகுல் காந்தியிடம் 10 மணிநேரம் விசாரணை: இரவில் நடந்தது என்ன?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் நேற்று 10 மணிநேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை. இந்த விசாரணையின்போது நடந்தனவற்றை பார்ப்போம்...

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் முறைகேடு நடந்ததாக 2012-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால் காங்கிரஸ் அலுவலகம், அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள மத்திய டெல்லி பகுதி முழுவதற்கும் நேற்று 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று காலையில் விசாரணைக்கு ஆஜராவதற்காக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ராகுல் காந்தி தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக புறப்பட்டார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ப.சிதம்பரம், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் புறப்பட்டனர். ராகுல் காந்தி 'இசட் பிரிவு' பாதுகாப்பில் இருப்பதால் அவருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஊர்வலம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால், ஆவேசம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்புகளை மீறினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். பூபேஷ் பாகல், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட பல தலைவர்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை பிரியங்கா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, 'நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை' பாஜக அரசு அமல்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், காலை 11.10 மணியளவில் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, யங் இந்தியா நிறுவனம் தொடங்கிய விதம், காங்கிரஸ் கட்சியின் நன்கொடை மற்றும் பங்குகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர்ந்து 3 மணிநேரம் அவரிடம் நடந்த விசாரணை மதியம் 2.10 மணியளவில் உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பிரியங்கா காந்தியுடன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி, கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் தாயார் சோனியா காந்தியை பார்வையிட்டுவிட்டு, மதிய உணவை முடித்த பிறகு 3.30 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மீண்டும் தொடர்ந்து இரவு 9.30 மணிவரை விசாரணை நடந்தது.

காலை 11.10 முதல் இரவு 9.30 மணிவரை ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மத்திய டெல்லி முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in