ஜாபர் சாதிக்கிடம் நான்கு கோடி ரூபாய் பெற்ற அமீர்?! அமலாக்கத்துறை சோதனையில் அதிர்ச்சி!

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

சென்னையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீர், ஜாபர் சாதிக் சொந்தமான வீடு அலுவலகங்கள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ள நிலையில் ஜாபர் சாதிக்கிடமிருந்து அமீர் நான்கு கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமீர்
அமீர்

2000 கோடி‌ ரூபாய் மதிப்பிலான 3500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கடந்த 9 ம் தேதி டெல்லியில் வைத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.‌ 

அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்கிற திரைப்படத்திற்காக இயக்குனர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை அமீர், ஜாபர் சாதிக்கிடமிருந்து பெற்றதும், இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள படம் எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும், இயக்குனர் அமீரும்  நண்பர்களாக பழகி வந்த நிலையில் இருவரும் சேர்ந்து லீ கேப் என்கிற உணவகத்தை நடத்தி வருவதும் விசாரணையில்  தெரியவந்தது.

இதனையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குனர் அமீர் உட்பட மூன்று நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி  டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில்  இயக்குனர் அமீர் தனது வழக்கறிஞருடன்  நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மைலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, தி.நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகம், சேத்துப்பட்டில் உள்ள அமீர் வீடு,  கொடுங்கையூர் ஸ்ரீராம் நகரில் ரகு என்பவரது வீடு, அலுவலகம், கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையில் ஷேக் முகமத் நசீர் வீடு, அடையாறு ஹாரி ஓட்டல் உரிமையாளர் அஜீஸ்  வீடு, அலுவலகம், உட்பட 14 இடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 50 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று காலை ஆரம்பித்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் பணப்பரிமாற்றம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாபர் சாதிக்கிடம் இருந்து சினிமா தொடர்பாக அமீர் 27 லட்சம் பெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவருக்கும் இடையே சுமார் 4 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இது குறித்து அமீரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது..

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in