
கரன்சிகளைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் கலோரிகளை கணக்கு பார்த்து தங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரத் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை சார்பில் ‘சர்வதேச மகளிர் தின விழா 2023' தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், ‘’வங்கிகளையே பார்த்திராத பாமரப் பெண்களையும் 'ஜன்தன்’ திட்டத்தின் மூலமாக வங்கிகளோடு உறவு ஏற்படுத்திக் கொடுத்தவர் பாரதப் பிரதமர். ’முத்ரா’ வங்கிக் கடன் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கு தர வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.
கொரோனா போன்ற பெருந்தொற்றுக்குப் பிறகு கடுமையான சூழ்நிலைகளையும் கடந்து இந்திய நாடு மீண்டு எழுந்ததற்கு வீட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் வைத்திருந்த சேமிப்பு பழக்கம்தான் காரணம். இந்த சேமிப்புகளுக்கு உதவி செய்தது வங்கிகள்.
சேமிப்பு பழக்கத்தைக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகளிடம் வங்கிகள் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் வங்கியை எளிதாக பயன்படுத்தும் வகையில் சேவையை வங்கிகள் எளிமைப்படுத்த வேண்டும். பாரத் ஸ்டேட் வங்கியில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் அதுவும் 33 சதவீதத்திற்கும் மேல் அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்ற தகவல் மகிழ்ச்சியைத் தருகிறது.
சமுதாயம் வளர்ச்சி பெறுவதற்கு பெண்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டியது அவசியம். கரன்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் கலோரிகளைக் கணக்கு பார்த்து தங்கள் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். யோகா செய்யுங்கள். ஆண்டுக்கு ஒரு முறை உடல்நலத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’’ என்றார்.