கடும் கட்டுப்பாடுகளுடன் இமானுவேல் சேகரன் குருபூஜை: தலைவர்கள் அஞ்சலி

கடும் கட்டுப்பாடுகளுடன் இமானுவேல் சேகரன்  குருபூஜை:  தலைவர்கள் அஞ்சலி

தியாகி இமானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் இன்று நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் தமிழக அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தியாகி இமானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக சார்பில் அதன் இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சகிதம் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இதே போல பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இமானுவேல் சேகரன் குருபூஜை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தென் மண்டல ஐஜி அஸ்ரகார்க் தலைமையில் 3 டிஐஜிகள் தலைமையில் 23 எஸ்பிக்கள், 27 ஏடிஎஸ்பிக்கள், 60 டிஎஸ்பிக்கள் என 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருபவர்கள் அவர்களுடைய சொந்த வாகனத்தில் தான் வரவேண்டும், ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், கோஷங்களை எழுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. 160 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 131 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக அறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் 41 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரன் குருபூஜை தினம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று காவல்துறையினர் மிக கவனமாக மாவட்டத்தில் பாதுகாத்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in