மின் கட்டணத்தை உயர்த்தினால் போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

தோழமையுடன் எச்சரிக்கும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வுக்கு வந்திருந்த பிரதமர் மோடியுடன் மலர்ந்த முகத்துடன் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சிகளையும், திமுக அரசுக்கு எதிராக தினம் ஒன்றை பற்றவைத்துப் போடும் பாஜக தலைவர் அண்ணாமலையே சிறப்பான முறையில் தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்திருந்ததாக பாராட்டுப் பத்திரம் வாசித்ததையும் தமிழகம் பார்த்துக் கடந்திருக்கிறது.

கடந்த முறை பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழகத்துக்கு ஜிஎஸ்டி பாக்கியை மத்திய அரசு தரவில்லை என ஆதங்கப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இம்முறை இருவரும் பரஸ்பரம் சிரித்துப் பேசிய காட்சிகளும் அரங்கேறியது. இப்படியான சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் காமதேனுவுக்காகப் பேசினோம்.

கோ பேக் மோடி முதல் ஜிஎஸ்டி நிதி கேட்டது வரை உரிமைக்குரல் எழுப்பிய மு.க.ஸ்டாலின், இம்முறை பிரதமர் மோடியிடம் மிகவும் சிநேகம் காட்டியதைக் கவனித்தீர்களா?

இது சர்வதேச விளையாட்டுப்போட்டி. அதை அரசியல் ரீதியாக அணுகவேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முரண்பாடுகள் இருப்பதுதான் உண்மை. இருந்தாலும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்களின் நலனை முன்னிறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் மத்திய அரசுடன் நெருக்கமான அணுகுமுறையை காட்டியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக பாஜக வேட்பாளருக்கு எதிராகத்தான் ஓட்டுப் போட்டது. துணைத் தலைவர் தேர்தலிலும், பாஜகவுக்கு எதிராகத்தான் ஓட்டுப்போடப் போகிறார்கள். பாராளுமன்றத்தில் திமுக எம்பி-க்களும் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். சர்வதேச விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த முதல்வரின் செயலைப் பாராட்டத்தான் வேண்டும். அது சரியான அணுகுமுறைதான்!

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது வீரியமான போராட்டங்களை முன்னெடுத்த சிபிஎம் இப்போது ரொம்பவே அடக்கிவாசிக்கிறதே?

எங்களைப் பொறுத்தவரை திமுக அரசின் மீது சில விமர்சனங்கள், குறைபாடுகள் இருந்தாலும் இதைவிட 100 மடங்கு மோசமாக இருக்கும் பாஜகவை எதிர்க்கும் போராட்டத்தை வலுப்பெறச் செய்ய வேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் பாஜக 27 எம்பி-க்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தைக்கூட பாஜக விட்டுவைக்கப்போவது இல்லை. இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எதைப் பேச வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் துடிக்கிறது பாஜக. நாட்டை மதவெறி நாடாக்க முயற்சிக் கிறார்கள். பாபர் மசூதி இடிப்பு, குடியுரிமைச் சட்டம் கொண்டுவந்தது என தங்களுக்கு இருந்த மூன்று அஜெண்டாவில் இரண்டை முடித்துவிட்டதாக பாஜகவினரே மார்தட்டுகிறார்கள். அடுத்தது பொதுசிவில் சட்டம்தான் என்கிறார்கள்.

பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் பறிக்கும் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் திமுக உறுதியாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியங்களை மனதில்வைத்து திமுக அரசின் குறைகளைச் சுட்டுகிறோம். அதற்காக திமுக செய்யும் அனைத்தையும் நாங்கள் சரி எனச் சொல்லவில்லை. ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறோம். போராட வேண்டியதில் போராடியே வருகிறோம். அண்மையில், குடிசைகள் இடிக்கப்பட்டபோதுகூட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். பாஜக எதிர்ப்புப் போராட்டத்தில் திமுகவுடன் இணைந்து நிற்போம். மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையின் போது மக்களின் உரிமைக்காகப் போராடுவதிலும் சமரசம் கிடையாது!

லாக்கப் மரணங்கள் அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அதிகம் என்கிறார்களே..?

அப்படி அதை அணுகமுடியாது. இந்த ஆட்சியிலும் அந்த அவலம் தொடர்கிறது. காவல்துறை இன்னும் ஒழுங்கான பயிற்சிக்கு வரவில்லை என்பதைத்தான் இதுகாட்டுகிறது. அதிமுக ஆட்சியில் நாங்கள் எவ்வளவு குரல் எழுப்பினாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். இந்த ஆட்சியில் நாங்கள் போராடினால் நடவடிக்கை இருக்கிறது. வழக்குகள் சிபிசிஐடிக்கு மாறுகிறது. தவறுசெய்யும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். தூத்துக்குடியில் 13 பேர் சாகடிப்பட்டபோது ஒரு கான்ஸ்டபிள்கூட கைதுசெய்யப்படவில்லையே? எனவே, அந்த ஆட்சியோடு இந்த ஆட்சியை ஒப்பிடவே முடியாது.

தமிழகத்தில் பாஜக பாராளுமன்றத் தேர்தல் பணிகளைத் துவங்கிவிட்டது. மார்க்சிஸ்ட் எந்த கட்டத்தில் இருக்கிறது?

பாஜகவினர் தமிழகத்தில் தாங்கள்தான் பிரதான எதிர்கட்சிபோல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். மத்திய அரசின் அதிகாரத்தைக் காட்டி மீடியாக்களை மிரட்டி தங்களுக்கு செல்வாக்கு இருப்பதுபோல் காட்டுகிறார்கள். பல கட்சியிலும் அதிருப்தியில் இருப்பவர்களை அணைத்துக் கொள்கிறார்கள். பணம், பொறுப்பு, அதிகாரம் என ஆசைகாட்டி பலரை வளைக்கின்றனர். தமிழகம் பாரம்பரியமாகவே அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழும் மாநிலம். இங்கு பாஜகவின் மத அரசியல் எடுபடாது. தமிழக மக்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், மதவெறி அவர்களுக்குக் கிடையாது. முன்கூட்டியே பணியைத் தொடங்கிவிட்டாலும் தமிழகத்தில் பாஜக ஜெயிப்பது பகல் கனவுதான்!

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைப் போல மாநில அரசும் மின் கட்டணத்தை உயர்த்தப் போகிறதே..?

மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. மத்திய அரசு, மாநில அரசுகளின் தலையில் சுமையை ஏற்றுகிறது. சொத்துவரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சிக்கு கொடுக்கும் மானியத்தை வழங்கமுடியாது என மிரட்டினார்கள். மக்களுக்கு எவ்வளவு வரிபோட வேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகள் தானே தீர்மானிக்கவேண்டும்?

அதேபோல், மின் வாரியத்தில் கடன் அதிகமாக இருக்கிறது அதற்கு உதவி செய்ய வேண்டும், மானியம் கொடுக்க வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்தித்தான் ஆகவேண்டும். காலப்போக்கில் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை. மாநில அரசு நிதிப்பற்றாக்குறையில் இருக்கும்போது அதன் தலையில் ஏறி மிதிக்கும் செயலில் ஈடுபடுகிறது மத்திய அரசு. ஆனால், அவர்கள் சொல்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழக அரசுக்குத் தான் அவப்பெயரை உண்டாக்கும்.

மின் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிக்க மாற்றுவழிகள் இருக்கின்றன. மின்சார வாரியத்தின் அதிக இழப்புக்குக் காரணமே அதிக விலைகொடுத்து மின்சாரத்தை தனியாரிடம் வாங்குவதுதான். 2011 -12 நிதியாண்டில் 16,488 கோடிக்கு தனியாரியிடம் மின்சாரம் வாங்கிய தமிழக அரசு, இப்போது 37,430 கோடிக்கு வாங்கியுள்ளது. இவ்வளவு அதிகத் தொகை கொடுத்து மின்சாரம் வாங்குவதால்தான் இழப்பு ஏற்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களின் திறனை அதிகப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். தனியாருடனான மின் ஒப்பந்தங்கள் அனைத்தும் நீண்டகால அடிப்படையில் போடப்படுகிறது. முந்தைய அதிமுக ஆட்சி முடியும்போது 8 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அந்த ஒப்பந்தங்களையெல்லாம் ரத்துசெய்துவிட்டு, குறைந்த தொகையை நிர்ணயம் செய்து புதிய ஒப்பந்தங்களைப் போடவேண்டும்.

சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் இதுதொடர்பில் மனுக்கள் கொடுத்துள்ளோம். ஏனென்றால், மின்சார வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை இந்த ஆணையம்தான் இறுதிசெய்ய வேண்டும். மின்கட்டண உயர்வை ஏற்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம். அதையும் தாண்டி மின் கட்டணத்தை உயர்த்தினால் இயற்கையிலேயே போராட்டம் எழுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

எதிர்கட்சி வரிசையில் இருந்தே 17 எம்.பிக்கள் வாக்கையும், சில எம்.எல்.ஏக்கள் வாக்கையும் பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் பெற்றிருக்கிறாரே? இந்த சூழலில் வரும் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பு சாத்தியமா?

பல கட்சி பிரதிநிதிகளையும் பாஜக பதவி, பணம் கொடுப்பதாக ஆசைவார்த்தை காட்டுகிறது. அரசியலில் கொள்கையில் பிடிப்பு, தலைமையின் மீது நம்பிக்கை இருக்கும் மக்கள் பிரதிநிதிகளைத்தவிர மற்ற அனைவரையும் விலைபேசும் நிலைக்கு பாஜகவினர் போய்விட்டார்கள். கோவா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, அஸ்ஸாம் என பல மாநிலங்களில் அதுதான் நடக்கிறது. கார்ப்பரேட் நிறுவனம் போல் அரசியல் செய்கிறார்கள். பணத்தைக்காட்டி வளைப்பது, அதிகாரத்தைக் காட்டி கைது நடவடிக்கையில் ஈடுபடுவது என மோசமான அரசியல் செய்கிறார்கள். . எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களில் சிலரை விலைக்குவாங்கலாம். ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாக்கை விலைக்கு வாங்கமுடியாது. அதன்பேரில் அகில இந்திய அளவில் ஒரு ஒருங்கிணைப்பு உருவாகும்.

கடந்த பலதேர்தல்களிலும் அது நடந்திருக்கிறது. எத்தனையோ அடக்குமுறைகளை பிரகடனப்படுத்தியும் 1977 தேர்தலில் ஜனதா கட்சி உருவாகி ஆட்சி மாற்றம் உருவானது. அதில் இந்திரா காந்தியே தோல்வியடைந்தார். அதுபோன்ற ஒருங்கிணைப்புவரும்.

சொந்தக் கட்சி எம்.பிக்களே பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக மாறிவிடக்கூடாது என்னும் பதட்டம் எதிர்கட்சிகளுக்கு மனச்சோர்வைத் தந்துவிடதா?

பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் மாற்றுக்கட்சிகளுக்கு போயிருக்கிறார்கள். முதலாளித்துவ கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பிலேயே எவ்வளவு செலவு செய்வார்? சமூகப் பின்னணி என்ன இருக்கிறது? என்பதைப் பார்த்துத்தான் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் ஏலத்தொகை அதிகம் கிடைக்கும்போது நகர்ந்துவிடுகிறார்கள். இது முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் திவால்நிலையத்தான் காட்டுகிறது. இடதுசாரி கட்சிகள் மட்டும்தான் இதில் தகுதி, கட்சிக்கான அர்ப்பணிப்பு, மக்கள் நெருக்கம் ஆகியவற்றைப் பார்க்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருக்கும் ஓய்வூதிய பணபலன் உள்ளிட்ட பிரச்சினைகள் திமுக ஆட்சியிலும் தீர்க்கப்படவில்லையே?

கடந்த 10 ஆண்டுகளாகவே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு டி.ஏ அரியர்ஸ் கொடுக்கவில்லை. சட்டமன்றத்திலும் மார்க்சிஸ்ட் இதை பேசியிருக்கிறது. முதல்வரை சந்தித்தும் நேரடியாகப் பேசியிருக்கிறோம். அதில் ஒரு பகுதியையேனும் முதலில் கொடுங்கள் என வலியுறுத்துகிறோம். இதேபோல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போதும் உரிய பணபலன்கள் வழங்குவதில்லை.

அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்குழைவு ஏற்பட்டு, அது இப்போதும் தொடர்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும், ஏற்கனவே ஏழெட்டு ஆண்டுகளாக இருக்கும் சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டியதையும் அறிந்திருக்கிறோம். அதனால்தான் படிப்படியாக வேணும் கொடுங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறோம். பணி ஓய்வுப்பெற்றுபோகும் தொழிலாளி மனநிறைவோடு செல்ல வேண்டும். அதற்கு மார்க்சிஸ்ட் தொடர்ந்து குரல்கொடுத்தே வருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கையை கிடப்பில் போடுவதை நிச்சயம் ஏற்கமுடியாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in