முதல்வர் சித்தராமையாவின் ஆலோசகரானார் தேர்தல் வியூக நிபுணர் சுனில்: கேபினட் அமைச்சர் அந்தஸ்து!

சுனில் கனுகோலு
சுனில் கனுகோலு

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகவாதியாக உள்ள சுனில் கனுகோலு, அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்படும்

2022ல் காங்கிரஸின் பிரச்சார வியூகத்தின் தலைவராகச் சேர்ந்த சுனில், கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தேர்தல் பிரசாரத்தை வழிநடத்திக்கொடுத்து, வெற்றியை பெற்று தந்த பெருமைக்குரியவர். மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வியூகப் பொறுப்பிலும் இவர் உள்ளார். கர்நாடகத் தேர்தலுக்கான பிரச்சார உத்திகள், செய்தி அனுப்புதல் மற்றும் கருத்துக்கணிப்புகளில் முக்கியமானவராக சுனில் செயல்பட்டார். கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் பணியாற்றிய சுனில், 2022ல் காங்கிரசுடன் இணைந்தார்.

கர்நாடகாவில், மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் சுனில் மற்றும் அவரது குழுவினர், பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ‘பேசிஎம்’ மற்றும் ‘40% சர்க்கார்’ பிரச்சாரங்களை வடிவமைத்த பெருமைக்குரியவர்கள். அவரது குழு, தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளை நடத்தியது. மேலும், காங்கிரஸுக்கு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் உள்ள இடங்களைக் கண்டறிந்து, அதனை சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகவில் காங்கிரஸுடன் பணியாற்றுவதற்கு முன்பு, சுனில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரசாந்த் கிஷோருடன் இணைந்து அரசியல் வியூகவாதியாக தனது பணியைத் தொடங்கினார்.

பின்னர் 2015ம் ஆண்டு தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே  பிரச்சாரத்தை வடிவமைத்தார். ஆனால் 2016 தேர்தலில் திமுக தோற்றது. பின்னர் 2020ல் அதிமுகவில் இணைந்து பணியாற்றிய அவர், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பொதுப் பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். ஆனால் 2021 தேர்தலில் அதிமுக தோற்றது. டிசம்பர் 2022ல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது பாரத் ராஷ்டிர சமிதிக்கு எதிராக அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் அலுவலகத்தில் தெலுங்கானா போலீஸார் சோதனை நடத்தினர். ஜனவரி 2023ல் சுனில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்த சோதனைகளை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது மற்றும் அதை சந்திரசேகர் ராவின் பழிவாங்கும் அரசியல் என்று கூறியது.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் தெலுங்கு பேசும் குடும்பத்திலிருந்து வந்தவர். சென்னையில் பல ஆண்டுகள் வாழ்ந்த அவர், அங்கேயே பல ஆண்டுகள் பணியிலும் இருந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in