ஈபிஎஸ் அறிக்கையை ஏற்ற இந்திய தேர்தல் ஆணையம்: இன்பதுரை வெளியிட்ட ட்விட்டால் ஓபிஎஸ் அதிர்ச்சி

இன்பதுரை
இன்பதுரை

எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட தணிக்கை அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் இன்பதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களைப் பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமனம் செய்தார். மேலும் அனைத்து சார்பு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான வழக்கறிஞர் இன்பதுரை இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார். அதில், "11.7.22 அன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டு , இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் கையெழுத்திட்ட 2021-22-ம் ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையை (audit report) ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இனியல்லாம் ஜெயமே" என்று குறிப்பிட்டுள்ளார். ஈபிஎஸ் தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது ஓபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in