தேர்தல் ஆணைய கருத்துக் கேட்பு கூட்டம்: பரபரப்பைக் கிளப்பும் ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதங்கள்!

தேர்தல் ஆணைய கருத்துக் கேட்பு கூட்டம்: பரபரப்பைக் கிளப்பும் ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதங்கள்!

தேர்தல் ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களை அனுப்பி வைப்பதாகத் தேர்தல் ஆணையத்திற்கு தனித்தனியே கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த இருக்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. நாடுமுழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி வரும் திங்களன்று தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அதிமுக சார்பாக ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அதிமுக தரப்பிலிருந்து கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதி இருக்கிறார். ஒரு கட்சிக்கு இருவர் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in