மாற்றம்.. முன்னேற்றம்.. ஏக்நாத் ஷிண்டே!

ஷிண்டே ட்விட்டர் முகப்பு
ஷிண்டே ட்விட்டர் முகப்பு

சிவ சேனா கட்சியின் சின்னம் கிடைத்ததை அடுத்து ஏக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் மகாராஷ்டிர முதல்வரான ஏக்நாத் ஷிண்டே.

உத்தவ் தாக்கரே மாநில முதல்வராகவும் சிவ சேனா கட்சியின் தலைவராகவும் விளங்கியபோது, அவருக்கு அனைத்துமானவராகவும் விளங்கியவர் ஏக்நாத் ஷிண்டே. தங்களை முழுமுதலாய் சிவ சேனா எதிர்க்க ஆரம்பித்ததும், மகராஷ்டிராவுக்கு வெளியே தடம் பதிக்க ஆரம்பித்ததையும் பாஜக ரசிக்கவில்லை. இதர எதிர்க்கட்சிகளைவிட, இந்துத்துவம் தொட்டு, பல்வேறு சித்தாந்தங்களை ஒருங்கே கொண்டிருக்கும் சிவ சேனாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பாஜக தடுமாறியது.

பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் பாஜக பழகிய அரசியல் சதிராட்டத்தை மராட்டிய மண்ணிலும் அரங்கேற்றியது. இதன் விளைவாக சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானோர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளனர். எனினும் யார் உண்மையான சிவ சேனா, யாருக்கும் கட்சியின் வில் அம்பு சின்னம் என்பதில் இழுபறி நீடித்தது.

பாலா சாகேப் நினைவிடத்தில் ஏக்நாத் ஷிண்டே
பாலா சாகேப் நினைவிடத்தில் ஏக்நாத் ஷிண்டே

இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எட்டியிருக்கும் முடிவின்படி ஏக்நாத் ஷிண்டே பக்கம் ’வில் அம்பு’ பாய்ந்திருக்கிறது. இதன் மூலம் உண்மையான சிவ சேனா கட்சி என்ற அடையாளத்தையும் ஷிண்டே பெற்றிருக்கிறார். சின்னம் கைக்கு வந்த கையோடு ’பாலா சாகேப் தாக்கரேயின் சித்தாங்களை மீட்டெடுப்பேன்’ சீனியர் தாக்கரேயின் நினைவிடத்தில் சென்று மரியாதை செய்து திரும்பியிருக்கிறார்.

ஜூனியர் தாக்கரேவான உத்தவ், உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாய் அறிவித்திருக்கிறார். ஆனபோதும், ஷிண்டே எதிர்பார்த்த பெரும் மாற்றம் அவருக்கு நடந்திருக்கிறது. கட்சியின் சின்னம் மற்றும் பெயர் தாங்கிய அடையாளத்தை உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் ஆக மாற்றியிருக்கிறார். பின்னணியில் சீனியர் தாக்கரே உடன் ஷிண்டே இருக்கும் படமும் இடம் பிடித்திருக்கிறது. ஷிண்டே எதிர்பார்த்த மாற்றம் தகைந்தபோதும், அரசியல் பாதையில் அடுத்தடுத்து முன்னேற்றம் வாய்க்குமா அல்லது பாஜகவை நம்பிய பிராந்திய கட்சிகள் பலவும் கண்டடைந்து போன்று ஏமாற்றம் சேருமா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in