
பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு விசாரணைக்காக பொன்முடியை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று காலை 3.30 மணிக்குத்தான் விசாரணை முடித்து அனுப்பினர். மேலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில், அமலாக்கத்துறை விசாரணைக் குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’ அமைச்சர் பொன்முடியை முதல்வர் அவர்கள், தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு பேசினார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர், துணிச்சலுடன் சட்ட ரீதியாக எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதலமைச்சர் உறுதி அளித்தார்’’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.