முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30-் தேதி பசும்பொன் செல்கிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்.30-ம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.
அதிமுக உட்கட்சி பூசல் எழுந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பசும்பொன் செல்லாத எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளராகிய பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் செல்கிறார். கமுதி அருகே உள்ள கிளைச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவருக்கு மதுரையிலிருந்தே உற்சாக வரவேற்பு கொடுத்து பசும்பொன் அழைத்துச் செல்வதற்கான பணிகளை தென் மாவட்ட அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா மாநாட்டை நடத்திய எடப்பாடி பழனிசாமி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஏன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தான் இந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று அவரது குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதனால் சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.