அம்மா பாணியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்!

அதிமுகவினரை அரசியல் களத்துக்கு இழுக்கும் ஈபிஎஸ்
அம்மா பாணியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்!

எதிர்க்கட்சியாக இருந்தாலும் போயஸ்கார்டனைவிட்டு ஜெயலலிதா புறப்படுகிறார் என்றாலே தமிழக அரசியல் களத்தின் தட்பவெட்பம் தாறுமாறாக எகிறும். அந்தளவுக்கு அதிமுக என்ற கட்சியை கட்டுக்கோப்பாய் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கட்டுக்கோப்பு கலைந்து போனதால்தான் அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி அடித்து ஆடுகிறார்கள். இனியும் இதைத் தொடரவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்திருக்கும் ஈபிஎஸ், ஜெயலலிதா பாணியிலான அதிரடி அரசியலுக்குத் தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இதுநாள் வரை கட்சிக்குள் தனது சகாவாக இருந்த ஓபிஎஸ் ஒருபக்கம் குடைச்சல் கொடுக்கிறார். கட்சியைவிட்டு ஒதுக்கப்பட்ட சசிகலாவும் தினகரனும் சாபம்விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதிமுக சீனியர்களோ, “எல்லோரும் ஒத்துமையா இருந்தா கட்சிக்கு நல்லது” என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள். இத்தனை பேருக்கும் பதில்சொல்லிக் கொண்டே ஜெயலலிதா பாணியிலான அரசியலுக்கு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறார் ஈபிஎஸ்.

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது போயஸ்கார்டனில் இருந்தாலும், கோடநாட்டில் இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என அதிமுகவினரை சோர்வடையவிடாமல் தட்டிவிட்டுக்கொண்டே இருப்பார் ஜெயலலிதா. அந்த ரூட்டில் தான் அண்மைக்காலமாக திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அறிவித்து தொண்டர்களை உசுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார் ஈபிஎஸ். அப்படித்தான் சொந்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது அதிமுக. ஜெயலலிதா சொல்லுக்குக் கட்டுப்பட்டதைப் போலவே ஈபிஎஸ் சொல்லுக்கும் கட்டுப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்து அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா காலத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது அந்த சமூகத்தைச் சார்ந்த அதிமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்களை அனுப்பி அந்தத் தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தவைப்பார். அதே பாணியை ஈபிஎஸ்சும் கடைபிடிக்கிறார். நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் நினைவிடத்துக்கும் உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் நினைவிடத்துக்கும் முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை அனுப்பிவைத்தது அப்படித்தான். அதேபோல் செப்டம்பர் 5-ல், வ.உ.சி பிறந்த நாளுக்கு தளவாய் சுந்தரம் தலைமையிலான குழுவை மரியாதை செய்ய அனுப்பிவைத்தார் ஈபிஎஸ்.

இது ஒருபுறமிருக்க, அதிமுகவுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் விதமாக மக்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்து போராட்டங்களை நடத்தவும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறாராம் ஈபிஎஸ்.

அதிமுக மாவட்ட செயலாளர்களும் எம்எல்ஏ-க்களும் தங்கள் பகுதியில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அடிக்கடி போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதிமுக்கிய பிரச்சினையாக இருந்தால் தலைமைக் கழக நிர்வாகிகளை அழைத்தும் போராட்டங்களை முன்னெடுத்து வெகுஜன பார்வைக்கு கொண்டுவரவேண்டும் என்பதும் ஈபிஎஸ் தந்திருக்கும் அட்வைஸாம்.

தேர்தல் சமயத்தில் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக வாட்ஸ்- அப் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேர்தல் முடிந்தவுடன் அதன் செயல்பாடுகள் அப்படியே முடங்கிவிட்டன. அந்தக் குழுக்களை புதுப்பித்தோ அல்லது புதிதாக குழுக்களை ஆரம்பித்தோ அதில், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பதிவிடும்படு ஐடி விங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாம். கூடவே, அந்தந்த பகுதியில் அதிகாரம் செலுத்தும், அத்துமீறும் திமுகவினர் குறித்தும் அந்தக் குழுக்களில் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். நடு நடுவே அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும் வாட்ஸ் - அப் வழியே மக்களிடம் பேசவும் யோசனை சொல்லி இருக்கிறாராம் ஈபிஎஸ்.

அண்ணாமலை
அண்ணாமலை

போராட்டங்களைவிட பேட்டிகள் மூலமே பாஜக தலைவர் அண்ணாமலை பேசப்படும் நபராகி வருகிறார். ஆ்னால், அதிமுக தரப்பில் செய்தியாளர்களிடம் விஷயத்துடன் பேசுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். இனி அப்படி இருக்காமல் உள்ளூர் அளவிலான பிரச்சினைகள் குறித்து அவரவரது பகுதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துமாறு முன்னாள் அமைச்சர்களுக்கும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறாராம் ஈபிஎஸ்.

தேர்தல் நெருங்குகிறது என்றால் ஜெயலலிதாவின் போராட்ட அறிவிப்புகள் வேகமெடுக்கும். அதேபோல் 2024 மக்களவைத் தேர்தலை முன்வைத்து கட்சியினரை களத்துக்கு இழுக்கும் ஈபிஎஸ்சின் அரசியல் வேகம் அம்மா அளவுக்கு கைகொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in