எடப்பாடி நாளை டெல்லி பயணம்; அமித் ஷாவை சந்திக்கிறார்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான தி நகர் சத்யா தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனைகள் நடத்தி இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

நாளை டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, விரைவில் கூடவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்தும், மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. அப்படியே அதிமுகவினர் விஷயத்தில் திமுக அரசு காட்டி வரும் கடுமையான போக்கு குறித்தும் அவர்களிடம் முறையிட திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான தி. நகர் சத்யா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் கோடநாடு கொலை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் அண்ணன் தனபால்  எடப்பாடி பழனிசாமி மீதும், அவருக்கு நெருக்கமான முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் மீதும் அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இதன் பின்னணியில் ஆளும் திமுக அரசின் சதி ஆலோசனைகள் இருக்கலாம் என பழனிசாமி தரப்பு சந்தேகம் கிளப்பி வருகிறது

டெல்லி பயணத்தின் போது இதுபோன்ற அதிமுகவினர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் பாஜக தலைவர்களிடம் எடப்பாடி எடுத்துச்சொல்ல திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்து வரும் கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் அவர் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in