‘கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அரசு நிவாரண உதவியா?’

எதிர்க்கட்சிகள் எகிறல்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமாவாசை
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமாவாசை

கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான நபருக்கே, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியை அரசு வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. மதுபான விற்பனையை அரசே எடுத்து நடத்துவதற்கு பிரதான காரணமாக, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதை ஆட்சியாளர்கள் முன்னிறுத்துவார்கள். அவ்வாறு அரசே மதுவிற்பனையில் ஈடுபட்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்திருப்பது, உயிரிழந்தோர் எண்ணிக்கை வாயிலாக அம்பலமாகி இருக்கிறது. மேலும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான வேட்டையில் வெளிப்படும் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள், கள்ளச்சாராய வர்த்தகம் எந்தளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

இதனிடையே கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அப்படியான ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி, கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றவாளியாக காவல்துறையால் அடையாளம் காட்டப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் திமுக பின்னணி கொண்டவர் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தகவலில், ’செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று அரசு வழக்கு பதிவு செய்துள்ள அமாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்பவரது தம்பி ஆவார். இந்த அமாவாசை தானும் கள்ளச்சாராயத்தை அருந்தியதாக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.

அரசின் நிவாரண உதவி பட்டியலில், கள்ளச்சாராய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்
அரசின் நிவாரண உதவி பட்டியலில், கள்ளச்சாராய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்

கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்த அமாவாசைக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை அரசு வழங்கியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும். கள்ளச்சாராயம் காய்ச்சி உயிர்களைப் பறித்தவருக்கு, அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, ஏன் இந்த உலக்கத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுக அரசுதான்!” என்று சாடியுள்ளார்.

தனது பதிவுக்கு சான்றாக அரசு வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், குற்றவாளிகள் என்ற தலைப்பின் கீழ் 4 நபர்களில் முதலாவதாக அமாவாசையின் பெயர் இருப்பதையும், அதே நபருக்கு அரசின் நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பட்டியல் நகலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு இணையவெளியில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in