கோடநாடு வழக்கில் இபிஎஸ்சிடம் விசாரணை நடத்த வேண்டும்: மருது அழகுராஜ் வலியுறுத்தல்

கோடநாடு வழக்கில் இபிஎஸ்சிடம் விசாரணை நடத்த வேண்டும்: மருது அழகுராஜ் வலியுறுத்தல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜா வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட அதிமுக(ஓபிஎஸ் அணி) சார்பில் கோத்தகிரியில், மாவட்ட செயலாளர் எம்.பாரதியார் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜா கலந்துக்கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் இளங்கோவனை அடையாளம் காட்டியுள்ளனர். கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் வைத்து பேரம் பேசியதாக சம்பந்தப்பட்ட ஐந்து பேர் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஆண்டுகளாக தன் கையில் வைத்திருந்த மாவட்ட செயலாளர் பதவியை சேலம் இளங்கோவனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

கோடநாடு கொலை வழக்கு விசாரணையில் குற்றவாளிகளைக் கைது செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து இத்தனை காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. என்னை விசாரணை செய்தது போல் எடப்பாடி பழனிசாமி மற்றும் சேலம் இளங்கோவன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in