பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா?... சற்று நேரத்தில் தீர்ப்பு: திருஷ்டி கழித்து ஈபிஎஸ்சை அனுப்பிவைத்த ஆதரவாளர்கள்!

பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட ஈபிஎஸ்
பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட ஈபிஎஸ்

சென்னை அருகே வானகரத்தில் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலை 6.40 மணிக்கே புறப்பட்டார் ஈபிஎஸ்.

அதிமுகவில் பூதாகரமாக கிளம்பியுள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இன்று ஒரு முடிவு எட்டப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ஈபிஎஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதற்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. எனினும் வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழுக்கான ஏற்பாடுகளை பக்காவாக செய்து வைத்து இருக்கிறது ஈபிஎஸ் ஆதரவு அணி.

பயோ மெட்ரிக் முறையில் தொண்டர்கள் உள்ளே செல்வதற்கான அனுமதி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக தனது பிரச்சார வாகனத்தில் இன்று காலை 6.40 மணிக்கு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஈபிஎஸ் புறப்பட்டார். அவருக்கு தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்து தொண்டர்கள் வழி அனுப்பி வைத்தனர். கடந்த முறை போல முகத்தில் எந்தவித இறுக்கமும் இல்லாமல், தெளிவாகவும் மகிழ்ச்சியோடும் இருந்தது ஈபிஎஸ்சின் முகம்.

கடந்த முறை போலவே வழிநெடுகிலும் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று ஈபிஎஸ் தரப்பு நம்புவதால் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படவில்லை. மாநிலம் முழுவதும் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்று இரவு முதல் சென்னைக்கு வர தொடங்கி விட்டனர். இன்று அதிகாலையில் இருந்தே அவர்கள் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றனர்.

வழிநெடுகிலும் தொண்டர்களின் வாழ்த்து மழையோடும், அவர்களின் ஏகோபித்த ஆதரவோடும் பொதுக்குழு நடைபெறும் அரங்குக்கு வர இருக்கிறார் ஈபிஎஸ். ஒட்டுமொத்த அதிமுகவும் அவர் பின்னால் அணிவகுத்திருப்பதை அவரும் அவரது ஆதரவாளர்களும் உறுதி செய்யும் விதத்தில் இன்றைய பொதுக்குழு அமைகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in