தயக்கம் காட்டும் நிர்வாகிகள்; இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது?- ஈரோட்டில் ஈ.பி.எஸ் தீவிர ஆலோசனை

ஈ.பி.எஸ் ஆலோசனைக் கூட்டம்
ஈ.பி.எஸ் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் ஈ.பி.எஸ் தீவிர ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர  ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என்று தனித்தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ள காரணத்தால் தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதனால் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வேட்பாளராக யாரை  களத்தில் இறக்குவது என்பது தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை  நடத்துவதற்காக  இன்று ஈரோட்டுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி  வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், ராமலிங்கம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில், தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி நிர்வாகிகள் எடப்பாடியிடம் விளக்கி கூறினர். அவர்களை சமாதானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, ‘‘இந்த நேரத்தில்  அதிமுக நிச்சயமாக போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in