வலிமையை நிரூபிக்க வரிந்து கட்டும் ஈபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தொடர்ந்து தேர்தல்களில் தோற்கக் காரணமாக இருந்தவர் என்ற தன்மீதான பழியைப் போக்கி  தன்னை வலிமையான ஒரு ஆளுமையாக நிரூபிக்க அதிரடிகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ஓபிஎஸ் தரப்புக்கு ஓரளவுக்கு ஆதரவாளர்கள் இருக்கும் தென் மாவட்டத்தின் சிவகங்கையில் பொதுக்கூட்டம் என மிரட்டும் ஈபிஎஸ், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களை பலவிதங்களில் மிரட்டிக் கொண்டிருக்கும் பாஜகவில் இருந்தே ஆட்களை இழுக்கும் வேலைகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார்.

தோல்விகளை கடக்கவேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல்,  தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்ற பாஜகவின் முழக்கத்துக்கும், ஓபிஎஸ், அமமுக, சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற  அண்ணாமலை தலைமையிலான பாஜகவின் தொடர் அழுத்தத்துக்கும் தக்க பதிலடி கொடுக்கவே ஈபிஎஸ் இப்படி எதிர்வினையாற்றுவதாகச் சொல்கிறார்கள். அதிமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பாஜகவை விமர்சனம் செய்வதையும் தடுக்காமலும் தந்திர அரசியல் செய்துவருகிறார் ஈபிஎஸ்.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார்,  செல்லூர் ராஜு போன்றவர்கள் பாஜக மீது விமர்சனக் கனைகளை எடுத்து வீசினார்கள். அவர்களை கண்டிக்கவும் இல்லை, அவர்கள் மீது நடவடிக்கையும் இல்லை.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய செங்கோட்டையன், “ஈரோடு கிழக்கு முன்பு அதிமுக வெற்றி வாகை சூடிய தொகுதி. இன்று 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளோம். இதில் 42 ஆயிரம் பேர் சிறுபான்மையினர். அவர்கள் பாஜக நம்முடன் கூட்டணியில் இருப்பதன் காரணமாக நமக்கு வாக்களிக்காமல் மாற்றி வாக்களித்தனர்” என்றார். இதற்கும் ஈபிஎஸ் தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், ”நான் ஏதும் பேசினால் சிக்கல் உண்டாக்குவார்கள். அதனால் மற்றவர்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுங்கள்; நான் கண்டும் கேட்காதது போல் இருந்து விடுகிறேன்” என்று இரண்டாம்கட்ட தலைகளுக்கு ஈபிஎஸ் சிக்னல் கொடுத்திருப்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த கால உதாரணங்களைப் பார்த்தால் அதிமுக - பாஜக உறவின் வலு தெரியும். 2018-ல் ”காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய பாஜக அரசு நியாயமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக எம்பி-க்கள் ஆதரிப்பார்கள்” என்று  தொலைக்காட்சி விவாதத்தில் பேசினார் அதிமுக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி. உடனே இதற்கு ரியாக்‌ஷன் காட்டிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையானது கே.சிபழனிசாமியை கட்சியைவிட்டே நீக்கியது. 

2021 டிசம்பரில் முத்தலாக் தடை மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தபோது மக்களவையில் அதை ஆதரித்துப் பேசினார் அதிமுக எம்பி-யான ரவீந்திரநாத் குமார். ஆனால், “அவரின் இந்த நிலைப்பாடு அதிமுகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல” என்று கருத்துத் தெரிவித்தார் முன்னாள் அதிமுக எம்பி-யான அன்வர்ராஜா. அவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்கள். இப்படி எல்லாம் நடந்திருக்கையில், இப்போது பாஜகவுக்கு எதிராக இத்தனை பேர் பிரளயம் கிளப்புகிறார்கள். ஆனால், ஈபிஎஸ் அமைதிகாக்கிறார். அவர் ஒரு வார்த்தை சொன்னால் யாரும் மூச் விடமாட்டார்கள். ஆனால், கட்சியினரை அப்படி அடக்கிவைக்க ஈபிஎஸ் இப்போது விரும்பவில்லை.

ஈபிஎஸ்ஸின் இந்த நிலைப்பாட்டிலிருந்தே அதிமுக - பாஜக உறவின் தற்போதைய நிலையை புரிந்துகொள்ளலாம். கடந்த மக்களவைத் தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க கணக்குப் போட்டார் ஈபிஎஸ். அதற்காக சீட் பங்கீட்டீல் கூட கறார் காட்டினார். அப்படியாவது நம்மைவிட்டுப் போய்விடமாட்டார்களா என எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. அன்றைய சூழலில், தேர்தலைக் கடந்தும் தங்களுக்குப் பாஜக தயவு தேவைப்பட்டதால் அப்போது சகித்துக் கொண்டார் ஈபிஎஸ்.

இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை கழட்டிவிட கணக்குப் போட்டார். ஆனால், கட்சிக்குள் அப்போது ஓபிஎஸ் இருந்ததால் அதை சாதிக்கமுடியவில்லை. இப்போது கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கருதும் ஈபிஎஸ், பாஜகவைவிட்டு விலக இதுதான் சரியான தருணம் என கணிக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இப்போது நடந்துகொண்டிருக்கும் பாஜக அட்டாக் சமாச்சாரங்கள்.

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் அல்லாத அதிமுகவுக்கு தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்பதே ஈபிஎஸ்ஸின் கோரிக்கை. ஆனால், இதை துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டே அனைத்து விஷயத்திலும் தங்களுக்குக் காரியம் சாதித்துக்கொள்ள நினைக்கிறது பாஜக. இடைத் தேர்தல் சமயத்தில் கடைசி நிமிடம் வரை கட்சிச் சின்னம் வழங்கும் விஷயத்தில் பாஜக ஆட்டம் காட்டிய விதமும் அவரை ரொம்பவே பாதித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதிலெல்லாம் வெறுத்துப்போய்த்தான் பாஜகவை புறக்கணிக்கும் முடிவை அவர் எடுத்திருக்கிறார்.  

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இடைத் தேர்தலில் அதிமுக 25.8 சதவீத ஓட்டுகளுடன் டெபாசிட் தொகையை தக்கவைத்தது  ஈபிஎஸ்ஸுக்குப் புது தெம்பை தந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த தைரியத்தில் தான் பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாராகிவிட்டார் என்கிறார்கள். பாஜகவை விட்டு விலகிவிட்டால் திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என்ற கணக்கும் இதற்குள் இருக்கிறதாம்.

முடிந்தால், உறவு ரீதியாகப் பேசி பாமகவையும் மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவரும் திட்டத்தையும் ஈபிஎஸ் வைத்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதன்மூலம், பாஜகவை கழட்டிவிட துணியும் அளவுக்கு தனக்கு ஆளுமை இருக்கிறது என்பதை நிரூபித்துவிட முடியும். அதோடு ஜெயலலிதாவைப் போல ஒரு மெகா கூட்டணியை  தன்னுடைய தலைமையில் அமைக்கவும் தன்னால் முடியும் என்பதையும் வெளிக்காட்ட விரும்புகிறார் ஈபிஎஸ்.  

ஒருபக்கம், பாஜகவை கழட்டிவிட துணிந்துவிட்ட ஈபிஎஸ், இன்னொரு பக்கம், எந்த அமமுகவுக்காக பாஜக தங்களை நெருக்குகிறதோ அந்தக் கட்சியையும் நொறுக்கத் தொடங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை பூர்விகமாக கொண்ட கிருஷ்ணராதா பெண்களுக்கான தொழில்முனைவோர் சங்கம் நடத்தி வருகிறார். சசிகலா மீதான அன்பால் அமமுகவில் இணைந்து செயலாற்றி வந்த அவரை தன் பக்கம் இழுத்து சசிகலா தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் ஈபிஎஸ்.  

அப்படித்தான் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களின் அமமுக பொறுப்பாளராக இருந்த எழுத்தாளர் கோமல் அன்பரசனையும் அதிமுகவுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். முன்னாள் எம்எல்ஏ-வான திருப்பத்தூர் கே.கே.உமாதேவன் ஆதரவாளர்கள் சகிதம் அதிமுகவில் இணைந்திருக்கிறார். அமமுக, ஓபிஎஸ் சைடில் இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கட்சிக்குள் கொண்டுவர  மூன்று முன்னாள் அமைச்சர்கள் மும்முரமாக பணியாற்றி வருகிறார்களாம். இதை முறியடிக்க, திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தி தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ஓபிஎஸ் அணி.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

இப்படி தனது ஆளுமையை நிரூபிக்க புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார் ஈபிஎஸ். இதே வேகத்தில் சென்றால் அதிமுகவை தனது கைக்குள் நிலைநிறுத்துவது தொடர்பான அவரது லட்சியம் நிறைவேறலாம். ஆனால் அதற்கும் பாஜக தயவு தேவைப்படும் நிலையில்தான் இன்னமும் அவர் இருக்கிறார் என்பதுதான் வேகத்தடையாக இருக்கிறது.  

ஈபிஎஸ்ஸின் இந்த திடீர் வேகம் குறித்து முன்னாள் அமைச்சரும் நாகை மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். ‘’இது இயல்பான ஒன்றுதான். கட்சியை வலுப்படுத்துவதுதானே தலைமையின் செயல்பாடு. அதைத்தான் எடப்பாடியார் செய்து கொண்டிருக்கிறார்.  மாற்றுக்கட்சியில் உள்ளவர்கள் அதிமுகவையும், எடப்பாடியாரின் தலைமையையும் விரும்பிவந்து தானாக சேர்கிறார்கள். நாங்கள் யாரும் போய் ஆள் பிடிக்கவில்லை.  

சிவகங்கை கூட்டம் நடத்தியதும் வழக்கமான ஒன்றுதான். அனைத்து மாவட்டத்திலுமே அப்படி கூட்டம் நடக்கிறது; நடக்கப் போகிறது. அம்மா இருந்தபோது பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த அதிமுக அடுத்த தேர்தலில் அசுரபலத்தோடு ஆட்சியைப் பிடித்தது. அதனால் வெற்றி, தோல்விகளால் அதிமுக எப்போதுமே நிலைகுலைந்துவிடாது. பாஜகவை விலக்கி வைத்துவிட்டு அடுத்த தேர்தலைச் சந்திப்போமா என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அது கட்சி எடுக்க வேண்டிய முடிவு” என்றார் அவர்.

ஓபிஎஸ்ஸை பின்னுக்குத் தள்ளி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபோதே, ”இவரெல்லாம் எத்தனை நாளைக்கி...” என்று ஈபிஎஸ்ஸை பரிகாசம் செய்தவர்கள் உண்டு. ஆனால், நான்காண்டுகள் ஆட்சியை எவ்வித சிக்கலும் இல்லாமல் நடத்தி முடித்தார். அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சை வெடித்தபோது, அதையும் தனது சாதுர்யத்தால் சாதித்துக் கொண்டார் ஈபிஎஸ். அடுத்ததாக, ஒற்றைத் தலைமை யார் என்ற பிரச்சினை வெடித்தது. அதிலும் தனது பலத்தை நிரூபித்து, ‘இனி, என் தலைமையில் தான் அதிமுக’ என்ற கட்டத்துக்கு வந்துவிட்டார்.

இப்போது அவருக்கு இருக்கும் ஒரே சவால், பாஜக தரப்பிலிருந்து தரப்படும் குடைச்சல்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை பகைத்துக் கொண்டால் இங்கே ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தங்களைப் பழிவாங்க ஏதுவாகிவிடும் என்பதாலேயே இத்தனை நாளும் பாஜக தரும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வந்தார் ஈபிஎஸ். ஆனால், அண்மை நாட்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், ‘அப்படி என்ன செய்து விடுவார்கள் பார்க்கலாம்’ என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாகவே தெரிகிறது!

அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறார் ஈபிஎஸ்?  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in