
ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் டிபி படத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஈபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம். அதில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
அதோடு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினார் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓபிஎஸ் தரப்பினர் மௌனமாக இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் யாருக்கு தீர்ப்பளிக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்ததோடு, அங்கே வைக்கப்பட்டிருந்த கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள படத்தை எடப்பாடி பழனிசாமி மாற்றி இருக்கிறார். அதில் ஜெயலலிதா படத்தை போட்டு பின்புறம் அம்மா 75 என்று குறிப்பிட்டிருக்கிறார்.