ஈபிஎஸ்சுக்காக வழக்கறுத்தீஸ்வரரிடம் ஒரு பிரார்த்தனை!

ஈபிஎஸ்சுக்காக வழக்கறுத்தீஸ்வரரிடம் ஒரு பிரார்த்தனை!

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குவந்து வழிபட்டால் வம்பு வழக்குகள் சுமூகமாக முடியும் என்பது அரசியல்வாதிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அப்படித்தான் 2 ஜி வழக்கு விசாரணையில் இருந்தபோது கனிமொழிக்காக இங்குவந்து பிரார்த்தனை செய்தார் அப்போதைய திமுக எம்பி-யான வசந்தி ஸ்டான்லி. இதேபோல் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழலில் சிக்கிய மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான், ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மீட்பதற்காக சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர், சிபிஐ வழக்குகளிலிருந்து விடுபட கார்த்தி சிதம்பரம் என பலரும் இங்குவந்து வழிபாடு நடத்தினார்கள். இப்போது ஒற்றைத் தலைமை விவகாரம் நீதிமன்றங்களில் மாறி மாறி இழுபட்டுக் கொண்டிருப்பதால் மனச் சஞ்சலத்தில் இருக்கும் ஈபிஎஸ், “வழக்குகளுக்காகவே நேரத்தை செலவிட வேண்டி இருக்கிறது. இப்படி இருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது” என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம். அவரது வாட்டத்தைப் போக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சோமசுந்தரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தி இருக்கிறார். ஈபிஎஸ் வழக்குகளிலிருந்து விடுபட வேண்டி இந்த வழிபாட்டை நடத்திய அவர், வழிபாடு முடிந்த கையோடு சென்னைக்குச் சென்று ஈபிஎஸ்சை சந்தித்து ஈஸ்வர பிரசாதத்தை வழங்கியதுடன், வழக்கறுத்தீஸ்வரரின் அருமை பெருமைகளையும் எடுத்துச்சொல்லி அவரை உற்சாகப்படுத்திவிட்டு வந்தாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in