‘உதயநிதிக்கு நோபல் பரிசு’ -எடப்பாடி சிபாரிசு!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

‘நீட் விலக்கு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு அதற்காக நோபல் பரிசு வழங்கலாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். பின்னர், மேற்படி புறக்கணிப்பு காரணத்தில் தொடங்கி, பட்ஜெட் குறித்தான விமர்சனங்கள் வரை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி காரசாரமாய் பேட்டியளித்தார் . திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பலதும், அவர்களின் 3வது பட்ஜெட் அறிவிப்பிலும் இடம்பெறாதது குறித்தும் விமர்சித்தார். அந்த வகையில் நீட் குறித்தும் சூடாக பேசினார்.

எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் உதயநிதி இருவரும் அண்மைக்காலமாக நீட் விவகாரத்தை முன்வைத்து பொதுவெளியில் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது ’திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் விலக்கை அமல்படுத்துவோம்’ என்று அறிவித்த உதயநிதி, அது குறித்து மேலும் விளக்க மறுத்தவராக ‘அது ரகசியம்’ என்று பூடகம் தெரிவித்திருந்தார். அப்போது பற்றிக்கொண்ட அந்த விவகாரத்தில், 'உதயநிதி வைத்திருக்கும் நீட் விலக்கு ரகசியம் என்ன’ என்று ஊடகங்கள் தொடங்கி எதிர்க்கட்சியினர் வரை பலரும் விவாதிக்க ஆரம்பித்தனர்.

எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில அரசியல் மேடைகளாக, ’நீட் விலக்கு ரகசியத்தை’ சொல்லுமாறு உதயநிதியை துழாவி வந்தார். கடந்த வாரம் அரியலூரில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘நீட் எதிர்ப்புக்கான சட்டப் போராட்டத்தை தொடர்வதே, அந்த நீட் விலக்கு ரகசியம்’ என்று ஒரு வித்தியாசமான விளக்கத்தை பகிர்ந்தார். இதுவும் பொதுவெளியில் அதிகம் விமர்சிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியும் உதயநிதியை கிண்டல் செய்யும் வகையில், “சட்டப் போராட்டம் நடத்துவதுதான் நீட் விலக்கு ரகசியமாம். ஏன் நாங்கள் நடத்தவில்லையா? உதயநிதி வெளியிட்டுள்ள நீட் விலக்கு ரகசியத்துக்காக, அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” என்று விளாசினார். இதனை ‘உதயநிதிக்கு நோபல் பரிசு’ என்று அதிமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பகடியாய் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in