`பாஜகவின் பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி'- பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளாசல்

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

"பாஜகவின் பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி. காவிரியைத் தூர் வாருவதற்குப் பதிலாக கரன்சியை தூர்வாரினார் எடப்பாடி பழனிசாமி. உழவர்களின் தலையில் போட நினைத்த துண்டு அவரது தலையிலேயே விழுந்துவிட்டது" என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், "கலைஞர் போராடி போராடி வளர்த்த மாவட்டம் தஞ்சை மாவட்டம். கலைஞரின் போராட்ட தழும்பு ஏறிய ஊர்தான் தஞ்சாவூர். மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 1,000-வது சதய விழா நடத்தியது கலைஞர்தான். தஞ்சை மக்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களே வியக்கும் வகையில் மகாமக விழாவை சிறப்பாக நடத்தியது திமுக ஆட்சி. 1992-ல் அதிமுக ஆட்சியில் மகாமகம் விழாவில் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.

காவிரி நீர் கடைமடைப்பகுதிக்கு சென்று சேருவதை உறுதி செய்தது நான்தான். காவிரி டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 4.9 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்துள்ளோம். நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பயிர்காப்பீட்டை உரிய முறையில் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவிரி உரிமையை தமிழ்நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தது திமுக ஆட்சி தான். காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் புதிய நவீன அரிசி ஆலைகள் நிறுவப்படும். கால்நடை தீவன தொழிற்சாலை புதிதாக அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக அரசு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி சாதிக்கும். இலக்கை தாண்டி சாதிப்பதையே அறிஞர் அண்ணாவும், கலைஞரும் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். நான் என்னை உழவன் என்று சொல்லிக்கொண்டது இல்லை, ஆனால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டேன். எடப்பாடி போல் வெளிவேஷம் போட்டுக் கொண்டது இல்லை. காவிரியைத் தூர் வாருவதற்குப் பதிலாக கரன்சியை தூர்வாரினார் எடப்பாடி பழனிசாமி. உழவர்களின் தலையில் போட நினைத்த துண்டு அவரது தலையிலேயே விழுந்துவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய வேளாண்குடி பெருமக்களுக்கு ஒட்டு மொத்தமாக துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. பல்லக்குத் தூக்கியாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிய அரசைத் தட்டிக் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைதிகாத்த ஒன்றிய அரசை கண்டிக்க கூட முன்வரவில்லை; திமுக பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி போராடியது. விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பேராசிரியர் ஜெயராமனை சிறையில் அடைத்தவர் பழனிசாமி. 8 வழிச்சாலை திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டவர் பழனிசாமி. வேளாண் சட்டத்தை ஆதரித்ததற்கு பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?. பாஜகவின் பாதம் தாங்கி எடப்பாடி பழனிசாமி. உழவர்களின் போராட்டத்துக்கு ஒன்றிய அரசு பணிந்து 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு திமுக அரசு.

வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது திமுக அரசு. ஆகவே நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், கொடுத்த வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவிற்கு தாருங்கள். அதை முழுமையான வெற்றியாக தாருங்கள். சமூக விரோத கட்சிகளை தூக்கி எறிந்து திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உதயசூரியன் சின்னத்துக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சார்ந்து இருக்கக்கூடிய நமது கூட்டணி கட்சிகளின் சின்னத்திற்கும் வாக்களித்து மாபெரும் வெற்றியை தாருங்கள் என விரும்பி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் வெற்றி விழாவில் சந்திப்போம், தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in