ஜூலை 11-ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்: பொதுச் செயலாளர் ஆவாரா ஈபிஎஸ்?

ஜூலை 11-ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்: பொதுச் செயலாளர் ஆவாரா ஈபிஎஸ்?

ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் நிலவி வரும் இரட்டை தலைமையால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுகிறது என்று கருதிய அதிமுக தலைவர்கள், எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாகக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக சில நாட்களாக முன்னெடுப்புகளை செய்து வந்தனர். அதற்கு ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நிலை இருந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்திற்கு சென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று உத்தரவு வாங்கினார்.

அதனால் இந்த கூட்டத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்து இருந்தது. இந்த நிலையில் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட ஓ.பி.எஸ்சால் முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். அவரைத் தொடர்ந்து அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுத்தனர்.

அதற்கு பிரிவு விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுத்தார். அதில் ஒற்றைத்தலைமை வேண்டும், அதற்காக அடுத்த பொதுக்குழு கூட்டத்தின் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பொதுக்குழு உறுப்பினர் விடுத்திருந்த அந்த கோரிக்கை கடிதத்தில், இரட்டை தலைமையால் கழகத்துக்கு ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் திமுக அரசையும், கட்சியையும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் இரட்டை தலைமையால் கடுமையாக எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை தலைமையால் முரண்பாடான தெளிவில்லாத ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது. நூறு ஆண்டுகளானாலும் கழகம் நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற அம்மா ஆசையை நிறைவேற்றும் விதமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவைப் போன்று வலிமையான, தைரியமான, தெளிவான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்

இப்பொதுக்குழுவில் இரட்டை தலைமையே ரத்து செய்துவிட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றிட விவாதித்து பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த பொதுக்குழுவில் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை உறுதிசெய்த அறிவிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்றும் கழகத்தின் நலன் கருதியும் 11. 7. 22 அன்று 9.15 மணிக்கு இதேபோல் சிறப்பான பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். அதனால் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட இயலாது. அதனால் அன்றைய தினம் நடைபெறுவதாக உள்ள பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in