`எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது'- எடப்பாடி பழனிசாமி பகிர்ந்த கிருஷ்ண உபதேசம்!

`எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது'- எடப்பாடி பழனிசாமி பகிர்ந்த கிருஷ்ண உபதேசம்!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண உபதேசத்தை பகிர்ந்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, கசப்பை மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று ஈபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். இதனை வரவேற்றார் டி.டி.வி.தினகரன். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மேலும், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சமாதானத்தை விரும்பிய ஓபிஎஸ்சை புறந்தள்ளிவிட்டு சட்ட யுத்தத்துக்கு தயாராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ண உபதேசத்தை பகிர்ந்துள்ளார். அதில், "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற ஶ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ்சை குறிவைத்தே இந்த உபதேசத்தை எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in