அதிமுக பெயர், கொடி வழக்கு; ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

அதிமுக பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் ஈபிஎஸ் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து கடிதங்கள் அனுப்பின.

இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொதுச் செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கூறி வருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஓபிஎஸ் பதிலளிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in