`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்'- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி

`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்'- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி

முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசியுள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் ஆட்சியா நடக்கிறது. இங்கு நடப்பது ஆட்சியே இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக தலைவர் என்று ஸ்டாலின் கூறுகிறார். எந்த கட்சியிலாவது தற்காலிக தலைவர்கள் இருக்கிறார்களா? ஸ்டாலின் அவர்களே, என்னைப் பொருத்தவரைக்கும் அதிமுக பொதுக்குழு கூடி, அந்த பொதுக்குழுவில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக நான் வந்திருக்கிறேன். நீ அப்படியா வந்தாய்" என்று எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், உன்னுடைய அப்பா உயிரோடு இருக்கும்போதே, பின்னர் பேச்சை மாற்றிய எடப்பாடி, திரு கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய், அதுவும் செயல் தலைவராகத்தான் இருந்தாய். கருணாநிதி வாய் பேச முடியாத நிலையில் இருந்த காலக்கட்டத்தில்கூட உன்னை நம்பி கட்சியை ஒப்படைக்கவில்லை. தன் மகனை நம்பிகூட கருணாநிதி திமுகவை ஒப்படைக்கவில்லை. செயல்தலைவராக வைக்கப்பட்டிருந்த நீ, எங்களை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை.

அப்போது நீங்கள் என்ன வசதியில் இருந்தீர்கள், இப்போது என்ன வசதியில் இருக்கிறீர்கள், இடைப்பட்ட காலத்தில் என்ன சதித்திட்டம் தீட்டி எவ்வளவு சம்பாதித்தீர்கள், இதையெல்லாம் விட்டுவிடுவோம் என்று நினைக்கிறீர்களா? விடமாட்டோம் ஸ்டாலின் அவர்களே. எங்களை வஞ்சிக்க நினைத்தால், எங்களை துன்புறுத்த நினைத்தால், மீண்டும் உங்களை வந்து சேரும். கல்லை மேலே எறிந்தால் அது கீழே விழும். அதேபோல நீங்கள் கல்லை எறிந்துவிட்டீர்கள். அனைத்தையும் அதிமுக பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதிமுகவினர் மீது போடும் வழக்குகள் எல்லாம் சதித்திட்ட வழக்குகள். தமிழக மக்களைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை. மக்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு முதலமைச்சர். மக்களின் கஷ்ட நஷ்டங்களை, துன்பங்களை, வேதனைகளை புரியாத ஒரு முதலமைச்சர். வரியை போட்டு மக்களின் தலையில் சுமையை சுமத்திவிட்ட முதலமைச்சர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in