
’மாநில அரசுகளை கவிழ்க்க மட்டுமே அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லி மதுபானக் கொள்கையை திருத்தியதன் அடிப்படையிலும், மதுக்கூட உரிமங்களை வழங்கியதன் அடிப்படையிலும், ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு பெரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக பாஜக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியன. விசாரணையில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.
ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கலை பொருட்படுத்தாது நிராகரித்திருக்கிறார். அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை என்பது ’முற்றிலும் புனையப்பட்டது’ என்று அவர் இன்று தெரிவித்தார். மேலும் அமலாக்கத்துறையை பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
”அரசியல் எதிரிகளை சமாளிக்கவும், மிரட்டவும் மட்டுமே அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்திருக்கிறது. ஆனால் அவற்றில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது, சட்டப்படியாக தண்டனை பெற்றிருக்கிறார்கள்? மாநில அரசுகளை கவிழ்க்க மட்டுமே அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” என்று கேஜ்ரிவால் கொதிப்போடு தெரிவித்துள்ளார்.
ஆனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், ’டெல்லி அரசின் மதுபானக் கொள்கையை பயன்படுத்தி ஆம் ஆத்மி கட்சி பயனடைந்திருக்கிறது. இந்த ஊழலில் பெற்ற பணத்தைக் கொண்டே 2022, கோவா தேர்தலை ஆம் ஆத்மி எதிர்கொண்டிருக்கிறது’ என்று தனது விசாரணை அடிப்படையில் தெரிவித்துள்ளது.