அக்டோபர் 3ம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்.பியும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்படும் இந்த சூழலில், அடுத்த குறி அபிஷேக்கிற்கு என்ற பேச்சு எழுந்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமான எம்ஜிஎன்ஆர்இஜிஏவிற்கு மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிப்பது தொடர்பாக அக்டோபர் 3ம் தேதி டெல்லியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய அபிஷேக் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நியாயமான போராட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறை இந்தகைய சம்மனை அனுப்பியுள்ளதாக கூறினார். அபிஷேக் பானர்ஜியின் பெற்றோர் அமித் பானர்ஜி மற்றும் லதா பானர்ஜி ஆகியோர் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 7ம் தேதிகளில் விசாரணைக்காக ஏஜென்சியால் அழைக்கப்பட்டுள்ளனர்.