சிவசேனா கட்சி யாருக்கு?... உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவிடம் ஆவணங்கள் கேட்டது தேர்தல் ஆணையம்!

சிவசேனா கட்சி யாருக்கு?... உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவிடம் ஆவணங்கள் கேட்டது தேர்தல் ஆணையம்!

சிவசேனாவில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே அணிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிவசேனா கட்சியை வழிநடத்துவதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க ஆகஸ்ட் 8 -ம் தேதிக்குள், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் அணிகள் தங்கள் தரப்பின் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். பிறகு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே ஜூன் 30-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து யார் சிவசேனா கட்சியைக் கைப்பற்றுவது என இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.

இந்த நிலையில்தான் சிவசேனாவில் மொத்தம் உள்ள 55 எம்எல்ஏக்களில் 40 பேரின் ஆதரவும், 18 மக்களவை எம்.பிக்களில் 12 பேரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 8 -ம் தேதி மதியம் 1 மணிக்குள் இரு தரப்பும் தங்களின் எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆவண ஆதாரங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இது பற்றிய அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே இதில் தேர்தல் ஆணையம் எத்தகைய முடிவினை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in