தமிழ் மகன் உசேனை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்: இரட்டை இலையை தக்க வைக்கிறார் ஈபிஎஸ்

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்தமிழ் மகன் உசேனை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்: இரட்டை இலையை தக்க வைக்கிறார் ஈபிஎஸ்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை அறிவித்தன. இதனால், இரட்டை இலைச்சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தரப்ப்பில் இருந்து ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ் மகன் உசேன் இன்று சமர்ப்பித்தார்.

இதையடுத்து அதிமுக வேட்பாளருக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in