ஆதாரை இணைப்பதால் மின் வாரியத்தின் நஷ்டத்தை எப்படிச் சமாளிக்க முடியும்?

அவசரப்படுத்தும் அரசு... அவதிப்படும் மக்கள்!
ஆதாரை இணைப்பதால் மின் வாரியத்தின் நஷ்டத்தை எப்படிச் சமாளிக்க முடியும்?

மின்கட்டண உயர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத மக்களுக்கு மீண்டும் ஒரு அதிரடி அட்டாக் கொடுத்துள்ளது தமிழக அரசு. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஷாக். ஆதார் இணைப்பு அவசியமானது என்கிறது அரசு. இது மக்களை அலைக்கழிக்கும் நடவடிக்கை என்கின்றன எதிர்க்கட்சிகள். எனினும் ஆதாரை இணைக்க டிசம்பர் கடைசி வரை அவகாசம் கொடுத்திருக்கிறார் மின் துறை அமைச்சர்.

வீடுகளுக்கான மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு, குடிசைகளுக்கான மின் இணைப்பு, விசைத்தறி மின் இணைப்பு போன்றவற்றுக்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்ற அறிவிப்பும் வந்ததால் மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

அரசின் இந்த அறிவிப்புகளால், ஆதார் எண்ணை இணைத்தால் இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்களோ, ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தால் அதற்கான 100 யூனிட் மின்சார மானியத்தை நிறுத்திவிடுவார்களோ, முன்னோர்களின் பெயரில் மின் இணைப்பு இருந்தால் எப்படி ஆதாரை இணைப்பது, இதன் மூலமாக வேறேதும் சிக்கல்கள் வருமோ என்று மக்கள் குழம்பிப் போனார்கள்.

இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி அலைகளை பார்த்துவிட்டு, “மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்து 100 யூனிட் மின்சார மானியத்தைப் பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம். ஆனால், மானிய சலுகை பறிக்கப்படாது என அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் ஆதாரை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வியெழுப்பினார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

இதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும், “மின் இணைப்பு எண்ணுடம் ஆதாரை இணைக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை தமிழக அரசு சிரமேற்கொண்டு முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. இதன் மூலம் அதிக மின்சாரத்தை விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி, மத்திய அரசு மானியத்தையும், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்யும் சூழ்ச்சி” என கண்டனம் தெரிவித்தார்.

இது விஷயமாக கருத்துத் தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், “எரிவாயு சிலிண்டர் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என 2016-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டபோது, அதற்குக் கண்டனம் தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இப்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவேண்டும் என்கிறார். ஆதார் இணைப்பு குறித்து மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் நிலவுகிறது. எனவே இதற்கான கால அவகாசத்தை 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்” என்றார்.

இந்தக் காரணங்களாலேயே, ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த விஷயத்தில் மக்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்திருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மின் இணைப்புப் பெற்றுள்ள எத்தனை பேர் சொந்த வீட்டில் இருக்கிறார்கள், எத்தனை பேர் வாடகை வீட்டில் இருக்கிறார்கள், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கின்றன ஆகிய தரவுகள் அரசிடம் இல்லை. சுமார் 1 லட்சத்து15 ஆயிரம் மின் இணைப்புதாரர்களின் தரவுகள் மட்டுமே மின்வாரியத்தில் இருந்தன. மின்வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்வாரியத்தை நவீன மயமாக்க வேண்டும். எனவேதான் மின் இணைப்பு எண்ணையும், ஆதாரையும் இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்த தரவுகள் நமக்கு கிடைத்த பிறகுதான், யார் வேறு வகைகளில் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்போதுதான் மின்வாரியத்தை சீரமைத்து மேம்படுத்த முடியும். இல்லையென்றால் தொடர்ந்து மின்வாரியம் நஷ்டத்தில்தான் இயங்கும். ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். தமிழக அரசின் இலவச மின்சார திட்டங்கள், பிற மானியங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் மக்களுக்கு இருக்கும் அச்சம் போகவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி, “மானியம் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வீடுகள், விசைத்தறி, குடிசைகள், விவசாயம் உள்ளிட்ட மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. மின் கட்டணத்தில் பல்வேறு கட்டண விகிதங்கள் இருக்கின்றன. வீடுகளுக்கான கட்டணம், குடிசைகளுக்கான கட்டணம், வணிக கட்டணம் என பயன்பாட்டுக்கு தகுந்ததுபோல மாறுபட்ட மின்சார கட்டண விகிதங்கள் உள்ளன. இப்போது, 10 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இந்தத் திட்டம் வருவாயின் அடிப்படையில் செயல்படுத்தப்படவில்லை, அனைத்து மின் நுகர்வோருக்கும் இந்தச் சலுகை உண்டு. அப்படியிருக்கையில் ஆதாரை இணைப்பதால் மின் வாரியத்தின் வருவாய் இழப்பை குறைப்போம் என்பதும் தவறான வாதம்.

வீட்டு உபயோகத்துக்கான மின்சாரம் என்று சொல்லி வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அதனை இரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குச் சென்று மின் அளவை செய்யும் மின் கணக்கீட்டாளரே கண்டறிந்துவிடலாம். ஆதாரை இணைப்பதன் மூலமாக இதனை எப்படி கண்டறிய முடியும். 10 ஆண்டுகளாக ஒரு கட்டிடம் வீடாக உள்ளது. திடீரென அதை அலுவலகமாக மாற்றினால், ஆதாரை இணைப்பதால் அதனை எப்படி கண்டறிய முடியும்? ஒருவர் இன்று ஒரு வீட்டில் வாடகைக்கு இருப்பார். அடுத்த ஆண்டு இன்னொரு வீட்டுக்கு மாறுவார். 10 ஆண்டுகளில் அவர் 10 வீடுகளுக்கு மாறலாம். அப்படியானால் ஒவ்வொரு வீட்டுக்கும் அவர் ஆதாரை கொடுக்க முடியுமா? இதனால் தேவையற்ற குழப்பங்கள் வராதா?

முக்கியமாக, விவசாய மின் இணைப்புகளை பொறுத்தவரை ஆதாரை இணைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும். தாத்தா பெயரில் உள்ள மின் இணைப்பை 4 பேரன்கள் பயன்படுத்தலாம். அப்படியானால் யாரின் ஆதார் எண்ணை இதில் இணைப்பது என்ற சிக்கல் உருவாகும். ஆக, இது முழுக்க முழுக்க மக்களை அலைக்கழிக்கும் செயல்தான். டிசம்பர் 31-க்குள் எப்படி 2.5 கோடி மக்களும் ஆதாரை இணைக்க முடியும். பொழுதுக்கும் செயல்பட்டால்கூட இதனை செய்துமுடிக்க வாய்ப்பில்லை" என்றார்

சா.காந்தி
சா.காந்தி

தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக மத்திய அரசின் அனைத்து உத்தரவுகளுக்கும் மின்சார வாரியம் கீழ்படிய வேண்டியுள்ளது. ஏனென்றால், இவர்களுக்கு கடன் வாங்க வேறு வழியே இல்லை. மின்சார வாரியம் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் சொல்கிறார். ஆனால், நஷ்டம் எப்படி வந்தது என்று அவர் சொல்வதில்லை. மின்வாரியத்தில் உள்ள நஷ்டம் என்பது தமிழக பட்ஜெட்டையே கபளீகரம் செய்யப் போகிறது. அதில் கணக்கற்ற முறைகேடுகள், ஊழல்கள் உள்ளது. இதில் நஷ்டம் எங்கிருந்து வந்தது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.

5 வருடத்தில் 60 ஆயிரம் கோடி நஷ்டம் எப்படி வந்தது என்று எங்களாலேயே சொல்ல முடியும். மின்சார வாரியத்தின் வேலை என்பது வெறுமனே மின்சாரத்தை வாங்கி, விற்பது மட்டும் இல்லை. மின்வாரியத்துக்கு மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. அதனை தனியாரும் பயன்படுத்தலாம் என்று விதி உள்ளது, அதில்தான் பெரும்பாலான நஷ்டம் ஏற்படுகிறது; முறைகேடுகள் நடக்கிறது.

தமிழகத்தில் தாழ்வழுத்தம், உயர் அழுத்தம் என 8 லட்சம் கிலோ மீட்டருக்கு மின்சார லைன் உள்ளது. 3 லட்சத்து 40 ஆயிரம் டிரான்ஸ்ஃபார்மர்கள், 1,040 சப் ஸ்டேஷன்கள் உள்ளன. இவை அனைத்தையும் தனியாரும் பயன்படுத்தலாம். அப்படியிருக்கையில் இவ்வளவு பெரிய நெட்வொர்க்கில் செல்வது அரசின் மின்சாரமா, தனியார் மின்சாரமா என்பதை எப்படி கண்டறிய முடியும். இந்த நெட்வொர்க்கை தனியாருக்கு திறந்துவிட்ட பின்னர்தான் இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

தமிழகத்தில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மின் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர். இதில் எந்த செக்பாயின்டும் இல்லை. இதில்தான் பெருமளவு ஊழல் நடக்கிறது. முக்கியமாக, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்தான் மின்வாரியத்தையே சூறையாடிவிட்டனர். அதுபோல மின்சார கொள்முதல், இயக்கம், விநியோகம் போன்றவற்றிலும் பெரும் முறைகேடுகள் நடக்கிறது. அப்படியிருக்கையில் ஆதாரை இணைப்பதால் நஷ்டத்தை எப்படி சரிசெய்யமுடியும்.

மின்சாரம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை இரு மாதங்களுக்கு ஒருமுறை அளவீட்டாளர்கள் பார்க்கிறார்கள், இது சிறப்பான நடைமுறை. அப்படி இருக்கையில் இதில் எப்படி முறைகேடு நடக்கும். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக ஆதாரை இணைக்கச் சொல்லலாம். அப்படியென்றால் பொறுமையாக ஒரு 6 மாத காலம் அவகாசம் கொடுத்து மிக எளிமையான முறையில் இணைக்க வேண்டும். இந்த ஆதார் இணைப்பு மூலம் மிகப்பெரிய டேட்டா திருட்டு நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆதாரை இணைக்காமல் இப்போதுள்ள முறையிலேயே தொடர்வதே சிறந்தது" என்றார்.

இந்த விஷயத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பேசிய தஞ்சாவூரை சேர்ந்த சிவக்குமார், "தாத்தா பெயரில் இருக்கும் மின் இணைப்பை பேரனின் பெயரில் மாற்ற தாத்தா, அப்பா இருவருக்கும் இறப்பு, வாரிசு சான்றுகள் வாங்க வேண்டும். அதெல்லாம் ஒருமாதத்தில் நடக்கும் வேலையா? எங்கள் ஊர்ப்பக்கம் விவசாய மின் இணைப்பு வைத்திருப்போர் குடும்பங்களில் சொத்துப் பிரச்சினையே வெடிக்க ஆரம்பித்து விட்டது” என்றார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் சரிசெய்ய வேண்டுமானால் ஒரு மாத கால அவகாசம் என்பது நிச்சயம் போதவே போதாது. இதைப் புரிந்து கொண்டு கால அவகாசத்தை மேலும் நீட்டித்தால் மட்டுமே மக்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் தமிழக அரசு தலை தப்பிக்க முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in