குருவாயூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் துலாபாரம் நேர்ச்சை

குருவாயூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் துலாபாரம் நேர்ச்சை
குருவாயூர் கோயிலில் துலாபாரம் நேர்ச்சை கொடுத்த துர்கா ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு நேற்று மாலை திடீரென வருகை தந்தார். அப்போது அவர் அங்கு துலாபாரம் நேர்ச்சையை நிறைவேற்றினார்.

அவரது வருகை குறித்தும், துலாபாரம் நேர்ச்சை குறித்தும் பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி துர்கா ஸ்டாலின் மிக எளிமையாக வந்திருந்து, இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றித் திரும்பியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக பகுத்தறிவு சிந்தனைகளை அதிகமாகப் பேசினாலும் ஆன்மிக உணர்வுகளுக்குள் அண்மைக்காலமாக பெரிய தலையீடுகளைச் செய்வதில்லை. அந்தவகையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அதிக அளவு ஆன்மிகப் பிடிப்பு உள்ளவராகவே இயங்கிவருகிறார். தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் பரப்புரை சுற்றுப்பயணம் செல்லும்போதும் உடன்வரும் துர்கா ஸ்டாலின், அதையொட்டி ஆன்மிக யாத்திரையும் செய்துவிடுவார். இப்போது துர்கா ஸ்டாலின், குருவாயூர் கோயிலில் போய் துலாபாரம் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம், குருவாயூரில் பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்கள் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோயிலுக்கு நேற்று(டிச.17) மாலை வந்திருந்த துர்கா ஸ்டாலின், தன் எடைக்குச் சமமாக நாட்டுச் சர்க்கரை மற்றும் ஆலயத்தில் உள்ள மணிக்கிணறு தீர்த்தம் ஆகியவற்றை கோயிலுக்கு வழங்கினார்.

இதற்கான எடை தராசில் துர்கா ஸ்டாலின் ஏறி அமர்ந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இந்த துலாபாரத்துக்கான கட்டணமாக ரூ.9,200-ஐ துர்கா ஸ்டாலின், கோயில் வளாகத்தில் உள்ள தேவசம் போர்டு கவுண்டரில் கட்டினார். இதேபோல் குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வளாகத்தைச் சுற்றி ’சுற்று விளக்குகள்’ உள்ளன. இந்த விளக்குகள் அனைத்தும் எண்ணெய் விட்டு ஒளிரச் செய்வதற்காக, துர்கா ஸ்டாலின் ரூ.40 ஆயிரம் கட்டணத்தை முன்கூட்டியே கட்டியிருந்தார். இதனால், அவர் வருகையையொட்டி சுற்றுவிளக்குகளும் ஏற்றப்பட்டன. குருவாயூர் தேவசம்போர்டு சேர்மன் மோகன் தாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் ஷாஜி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை உடனிருந்து செய்தனர்.

Related Stories

No stories found.