கோவில்பட்டியைக் குறிவைக்கும் துரை வைகோ!

துரை வைகோ
துரை வைகோ

வைகோவின் அரசியல் வாரிசான அவரது மகன் துரை வைகோ அண்மைக் காலமாக கோவில்பட்டி தொகுதியையே சுற்றிச் சுற்றி வருகிறார். தனது மகன் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லிக் கொண்டே வந்த வைகோ, ஒருகட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகளையும் மீறி மகனை கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஆக்கினார். அடுத்ததாக தேர்தல் அரசியலுக்கும் தயாராகும் துரை வைகோ, அதற்கான களமாக கோவில்பட்டி தொகுதியைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோற்று, கடம்பூர் ராஜூ ஜெயித்ததை கோயில்பட்டி மதிமுக உள்ளுக்குள் ரசிக்கவே செய்தது. காரணம், இந்தத் தொகுதியில் வைகோவின் சமூகமான நாயக்கர் வாக்குகளும், டிடிவி தினகரனின் முக்குலத்தோர் வாக்குகளும் கணிசமாக இருந்தும் கடம்பூர் ராஜு வெற்றிபெற்றார். இத்தனைக்கும் திமுக கூட்டணியில் நின்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனும் நாயக்கர் தான். நாயக்கர் சமூகத்தில் இரண்டு வேட்பாளர்கள் நின்று அந்த சமூகத்தின் வாக்குகளைப் பிரித்தபோதும் முக்குலத்தோரான ஜாம்பவான் தினகரனால் அங்கே ஜெயிக்கமுடியவில்லை.

இதுதான் மதிமுகவை கோவில்பட்டி தொகுதியை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உண்மையில், கடம்பூர் ராஜூவை விட செல்வாக்கான வேட்பாளர் என்றால் அது டிடிவி தினகரன் தான். அதுமட்டுமின்றி கோவில்பட்டி தொகுதிக்குள் வரும் கயத்தாறு ஒன்றியத்தின் செல்வாக்கான மனிதர் அமமுகவின் மாணிக்க ராஜா. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில், கடம்பூர் இளைய ஜமீனான மாணிக்க ராஜா இறங்கி வேலை பார்த்ததால் தான் கடம்பூர் ராஜூ ஜெயித்து அமைச்சரும் ஆனார். அந்த நம்பிக்கையில் தான் இம்முறை டிடிவியை கோவில்பட்டிக்கு அழைத்துவந்தார் மாணிக்க ராஜா. அப்படிப்பட்டவர் இந்தமுறை இன்னொரு சாதிக்காரருக்கு வாக்குக் கேட்டதை நாயக்கர் சமூக மக்கள் ஏற்கவில்லை. அதனால் தான் கடம்பூராரின் வெற்றி சாத்தியமானது.

இந்தக் கணக்கை எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டுத்தான், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மகன் களமிறங்க இந்தத் தொகுதியை டிக் செய்திருக்கிறார் வைகோ. அப்பாவின் குறிப்பறிந்த துரையும் கோவில்பட்டி தொகுதிக்குள் இப்போது பம்பரமாகச் சுற்றுகிறார். வைகோவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும்பகுதி கோவில்பட்டி தொகுதிக்கான திட்டங்களுக்கே திருப்பப்படுவதாகச் சொல்கிறார்கள்.

அந்தத் திட்டங்களை எல்லாம் துரை வைகோவே நேரில் வந்து தொகுதி மக்களுக்கு அர்பணிக்கிறார். பேருந்து வசதி இல்லாத வழித் தடங்களில் பேருந்து போக்குவரத்தை அவரே கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். துரை வைகோ எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத போதும் திமுக அரசு இதற்கெல்லாம் பரிபூரண ஆசியைக் கொடுத்துள்ளது.

கோவில்பட்டி தொகுதியைச் சேர்ந்த மதிமுகவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் ஆஜராகிவிடும் துரை வைகோ, தொகுதி மக்களையும் அடிக்கடி ஏதாவது ஒருவகையில் சந்தித்து உரையாடுகிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவில்பட்டி மதிமுகவினர் சிலர், “துரை அரசியலுக்கு வந்தாயிற்று. எப்படியும் அவரும் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட்டுத்தானே ஆகவேண்டும்? அவரது சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் தனி தொகுதி என்பதால் அங்கே போட்டியிட முடியாது. அதைவிட்டால் எங்களுக்கு சாதகமாக கோவில்பட்டி தொடங்கி சாத்தூர் வரை ஐந்து தொகுதிகள் உள்ளது. இதில் கோவில்பட்டியில் மதிமுக கூடுதல் பலத்துடன் உள்ளது. எனவே துரை கோவில்பட்டியில் நின்றால் சந்தேகமே இல்லாமல் ஜெயிக்கலாம்” என்றனர்.

மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது 2016 தேர்தலில் இங்கே போட்டியிட விரும்பினார் வைகோ. ஆனால், தொகுதிக்குள் இருக்கும் நாயக்கர் சமூகத்தினரில் பெரும்பகுதியினர் கடம்பூர் ராஜூ பக்கம் இருப்பதை அறிந்ததும் போட்டியிலிருந்து விலகிக் கொண்ட வைகோ, தனக்குப் பதிலாக விநாயக ரமேஷை நிறுத்தி பிரச்சாரம் மட்டும் செய்தார். அந்தத் தேர்தலில் விநாயக ரமேஷ் மூன்றாமிடத்துக்குப் போனாலும் கௌரவமான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதுவும் மதிமுகவை தெம்பூட்டியது.

துரை வைகோ தனக்குப் போட்டியாக வரலாம் என்பதை ஊகித்துவிட்ட கடம்பூர் ராஜூ, நான்காவது முறையாகவும் கோவில்பட்டியை வென்றெடுக்க தனக்கே உரிய பாணியில் மக்களை நெருங்கி வருகிறார். குறிப்பாக, நாயக்கர் சமூகத்தினர் வீட்டு நல்லது கெட்டதுகளில் மறக்காமல் ஆஜராகிவிடுகிறார். கோயில் விழாக்களிலும் கடம்பூராரின் தலை தட்டாமல் பளிச்சிடுகிறது.

கோவில்பட்டி தொகுதியின் நெளிவு சுளிவுகளை நன்கு படித்து வைத்திருக்கும் கடம்பூர் ராஜூவுக்கு முன்னால் கன்னித் தேர்தலைச் சந்திக்க வரும் துரை வைகோவின் கணக்கு எடுபடுமா?

பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in