கிராம குழுக்கள் மூலம் காட்டுப்பன்றிகளை அழிக்க வேண்டும்: வனத்துறை அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

கிராம குழுக்கள் மூலம் காட்டுப்பன்றிகளை அழிக்க வேண்டும்: வனத்துறை அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்தி அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து துரை வைகோ  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சரிடம் துரை வைகோ அளித்துள்ள மனுவில்," தமிழகத்தின் பல பகுதிகளிலும் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தால்  விவசாயிகளுக்கு பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து   கடந்த  20.12.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை  ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். 

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3-ன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் இருக்கும் வெர்ம்ன் லிஸ்ட் (  Vermin List) ல் கொண்டுவர ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016-ம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5- ன் கீழ் கொண்டுவர, உத்தராகண்ட் மற்றும் பிஹார் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டது.

அதைப்போல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத்துறை மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம்  காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

அனைத்து விவரங்களையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர், வன விலங்கு சட்ட நடைமுறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரிகளிடமும் விவாதித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in