`திமுகவில் இணைவதற்கு பேரம் பேசுகிறார் துரை வைகோ'

போட்டி மதிமுக குற்றச்சாட்டு
பொடா செவந்தியப்பன் தலைமையில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், உயர் மட்டக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம் ஆகியோரது பத்திரிகையாளர் சந்திப்பு.
பொடா செவந்தியப்பன் தலைமையில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், உயர் மட்டக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம் ஆகியோரது பத்திரிகையாளர் சந்திப்பு.

"வாரிசு அரசியலுக்கு எதிராக வரிந்துகட்டும் மதிமுகவினர். வைகோவுக்குக் காத்திருக்கும் பெரும் சவால்!" என்ற தலைப்பில் கடந்த நவம்பர் மாத 'காமதேனு’ இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். "1993-ம் ஆண்டு, நவம்பர் மாதம். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வைகோவைக் கட்சியிலிருந்து நீக்குவதாகத் திமுக செயற்குழு முடிவெடுத்தது. அடுத்த நாளே, 'நாங்கள்தான் உண்மையான திமுக. கறுப்பு சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும், அண்ணா அறிவாலயமும் எங்களுக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடினார் வைகோ.

28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பப் போகிறது. 'நாங்கள்தான் உண்மையான மதிமுக. சிவப்பு கறுப்பு சிவப்பு கொடியும், தாயகமும் எங்களுக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள். கட்சியிலிருந்து அவர்களை நீக்கினால், அடுத்த நாளே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, 1993-ல் வைகோ சொன்னதையே அவர்களும் சொல்வார்கள்" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல வைகோ அவர்களை கட்சியைவிட்டு நீக்கவில்லை. மாறாக, மூத்த நிர்வாகிகள் என்றும் பாராமல் இவர்களை எல்லாம் துரோகிகள் என்று பேட்டி கொடுத்தார் துரை வைகோ. கிட்டத்தட்ட 7 மாத காலம் பொறுத்திருந்த மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இன்று சிவகங்கையில், அந்த மாவட்டத்தின் மதிமுக செயலாளரும், பொடாவில் சிறை சென்றவருமான புலவர் செவந்தியப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கோகுலேஹால் தெருவில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலாளரும், உயர் மட்டக்குழு உறுப்பினருமான அழகுசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன், சிவகங்கை மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பாரதமணி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்ட நிறைவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்கள், ”மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறித்தான் திமுகவிலிருந்து மதிமுக பிரிந்தது. தற்போது அதேபோல் தனது மகனை கட்சிக்கொள்கைக்கு விரோதமாக துணைப்பொதுச் செயலாளராக்கியுள்ளார். அதுவும் படிப்படியாக மேலே கொண்டுவந்திருந்தால்கூட பரவாயில்லை. எடுத்தவுடனே தலைமை நிலைய செயலாளர் பதவியில் உட்கார வைத்திருக்கிறார். வைகோவின் இந்த தன்னிச்சையான செயலுக்கு தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இனிமேல் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

அடுத்த நாளே தனிஈழம் பெற்றுத்தந்துவிடுவது போல பேசி, இளைஞர்களை தவறாக வழிநடத்தி அவர்களது வாழ்க்கையையே வைகோ கெடுத்துவிட்டார். இப்போது எப்படியாவது மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று அவரது மகன் துரை பேரம் பேசிவருவதாக தகவல் வந்துள்ளது. தங்களைக் காட்டி அவர்கள் விலை பேசுவதற்குள், மதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப மதிமுகவில் இணைந்துவிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு
போட்டி கூட்டத்தை கண்டித்து மதிமுகவினர் போராட்டம்
போட்டி கூட்டத்தை கண்டித்து மதிமுகவினர் போராட்டம்

போட்டி மதிமுகவினர் கூட்டம் நடத்துகிற தகவல் அறிந்ததும் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் சார்லஸ் தலைமையில் 35 பேர் அங்கு குவிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதிமுகவில் இருந்து இந்தத் துரோகிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டார்கள். அந்த அலுவலகம் யாருக்குச் சொந்தமானது என்கிற பிரச்சினையை தாசில்தாரே நேரில் வந்து தீர்த்துவைத்தார்.

இந்த கூட்டம் பற்றி கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரத்திடம் கேட்டபோது, "வைகோவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 1993-ம் ஆண்டு சிவகங்கையில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தைப் போட்டவர் அன்றைய திமுக மாவட்ட செயலாளர் தா.கிருட்டிணன். எனவேதான் வைகோவையும், அவரது மகனையும் மதிமுகவில் இருந்து நீக்கிவிட்டு, உண்மைத் தொண்டர்கள் எல்லாம் திமுகவில் இணைகிற வரலாற்று முடிவெடுக்கும் இந்த கூட்டத்தை சிவகங்கையில் நடத்தினோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in