'டம்மி முதல்வர் ரங்கசாமி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது': நாராயணசாமி அதிரடி!

'டம்மி முதல்வர் ரங்கசாமி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது': நாராயணசாமி அதிரடி!

நில உரிமை அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கியதன் மூலம், முதலமைச்சர் ரங்கசாமி டம்மி முதல்வர் என தான் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மோடியும், அமித்ஷாவும் வெற்றி அடைந்துள்ளனர். தேர்தலில் வென்று ஆட்சி அமைக்காமல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கட்சிகளை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக. புதுச்சேரி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கோவா எனப் பல மாநிலங்களில் உள்ள எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியினர் துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம் எனக் கூறியுள்ளனர். புதுச்சேரி மக்களுக்கும் அந்த உணர்வு இருக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. மக்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. கஞ்சா விற்பனை, சட்ட விரோதத் தொழில்கள், ரவுடிகள் மிரட்டல் எனச் சட்ட விரோதத் தொழில்களின் கூடாரமாகப் பாண்டிச்சேரி இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுவிடும்.

ஜிப்மர் மருத்துவமனை சரித்திரத்திலேயே பேராசிரியர்கள் தெருவில் இறங்கிப் போராடியது இல்லை. இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் நிர்வாகம் சீர்கெட்டுக் கிடக்கிறது. ஜிப்மரை கவனிக்க முடியாத மத்திய அரசால் புதுச்சேரியில் எப்படி வளர்ச்சி திட்டங்களைக் கொண்டுவர முடியும்? கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், துணை நிலை ஆளுநருக்கு நில உரிமை அதிகாரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மாநிலமாக இருந்து வருகிறது. முதலமைச்சரையும், அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தத் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. பொதுச் சொத்துகளைத் தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கவே ஆளுநருக்கு நில அதிகாரத்தைக் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது அதிகாரத்தைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் கொடுத்துவிட்டார். ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருப்பதாக நான் கூறியது இதன் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in