ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமான டாக்டர் சரவணன்!

ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமான டாக்டர் சரவணன்!

பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணையக்காத்திருந்த டாக்டர் சரவணன் திடீரென எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் டாக்டர் சரவணன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என டாக்டர் சரவணன் எதிர்பார்த்திருந்தார். ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சரவணன், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனாலும், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மதுரையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னெடுத்து பாஜக சார்பில் போராட்டங்களை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் அருகே தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் சிலர் காலணியை வீசினர். இந்த சம்பவம் நடந்த அன்று இரவு, நிதியமைச்சரை சந்தித்து பாஜக மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் வருத்தம் தெரிவித்தார்.

அத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், டாக்டர் சரவணன் மகன் திருமணம் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிமுகவைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் பலர் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைத்தார். இதன் காரணமாக டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியானது. அதற்கான நடவடிக்கையிலும் டாக்டர் சரவணன் ஈடுபட்டு வந்தார். ஆனால், டாக்டர் சரவணன் வருவதை திமுக தலைமை பெரிதாக ரசிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் டாக்டர் சரவணன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in