சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அதனை வலியுறுத்தி  தி.க சார்பில்  போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளையொட்டி, திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு தி.க. தலைவர் வீரமணி இன்று,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அவர் பேசியதாவது,  "ஜாதி, மத வெறி, பதவி ஆசைகளை துறந்த பெரியார் ஓர் பேராயுதம். அவர் உடலால் வாழ்ந்த காலத்தை விட, அவர் உணர்வால் நிறைந்த காலமாக இக்காலம் உள்ளது. 

பெரியார் கொள்கைகள், பெரியார் சிலையை கண்டு எதிரிகள்  அஞ்சும் நிலை இன்றும் உள்ளது. பெரியாரின் தத்துவத்தை கண்டு மிரளுகின்றனர்.  சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், தென் மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். தென் தமிழகம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கும். 

இதற்கான தொடக்கவிழா மதுரையில் நடந்த நிலையில், ராமர் பாலம் உள்ளது என ஒரு சிலர் சேர்ந்து கற்பனையாக திட்டமிட்டு அதனை இடிக்கக்கூடாது என கூறி அத்திட்டத்தை நிறுத்தினர். 

மாற்று வழியில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. 

இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தாமல் பாஜக அரசு புறக்கணித்துள்ளது என்பது தமிழக மக்களை ஏமாற்றி, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்பதற்காக  மேற்கொண்ட முயற்சி என தெரிய வந்துள்ளது.  எனவே, மேலும் தாமதிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக  செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் செயல்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். தி.கவும் இதற்காக போராட்டம் நடத்தும்" - இவ்வாறு வீரமணி பேசினார்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in